பால் சுரப்பை நிறுத்துவது எப்படி?

டாக்டர் எனக்கொரு டவுட்டு: டாக்டர் நிர்மலா சதாசிவம்

எனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள் மூலம் நிறுத்த முடியுமா? மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா?

ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் நிர்மலா சதாசிவம்…

பாலூட்டும் தாய்மார்களுக்கு புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் சுரப்பு இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஹார்மோன் கொஞ்சம்கொஞ்சமாக சுரப்பதை நிறுத்தும். ஆனால், பால் ெகாடுப்பதை நிறுத்திய உடனே பால் சுரப்பது நிற்காது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு3 – 6 மாதங்கள் வரை தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அது இயல்புதான். பிரச்னை ஒன்றுமில்லை.

பொதுவாக குழந்தைக்கு ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதனால்அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒருவேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.

அரிதாக ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது ஹார்மோன் பிரச்னை. அதாவது, புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன்சுரப்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தாய்ப்பால் நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் சிலருக்கு இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து வேறு காரணங்களால் இப்பிரச்னை ஏற்படாது.

புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை குணப்படுத்தி விட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால் அறுவைசிகிச்சை மூலம்தான் சரி செய்ய முடியும். இது மூளை வழியாக சிறுதுளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை.

ஒரு சிலர் பால் சுரப்பதை நிறுத்துவதற்காக மல்லிகைப் பூக்களை மார்பகத்தின் மீது சுற்றிக் கட்டிக்கொள்வார்கள். மல்லிகைப் பூவில் இருக்கும் ஒரு ரசாயனத்துக்கு ஓரளவு பால் சுரப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. இதனால் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லை. பலனும் அதிகமாக இருக்காது. சுரப்பு குறைவாக இருக்கும் போது இம்முறையை பயன்படுத்தலாம்.

[img]http://img.dinakaran.com/Healthnew/H_image/ht3778.jpg[/img]

Originally posted 2016-01-21 03:49:58. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *