இதயத்தை கவனியுங்கள்!

இதயம் மனித உடலில் உள்ள மிக அத்தியாவசியமான உறுப்பு. நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக நடப்பதற்குத் திருவாளர் இதயமே பொறுப்பு. ஆனால் கவிஞர்களும், மக்களும் சேர்ந்து இதைக் காதலின் அடையாளச் சின்னமாக ஆக்கிவட்டார்கள்.
மனித உறுப்புகளில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள உறுப்பு ஒன்று உண்டென்றால் அது இதயமாகத்தான் இருக்க முடியும். ஏண்டா இப்படி இரக்கமே இல்லாம அரக்கத்தனமா நடந்துக்கிற? உனக்கு இதயமே இல்லையா?
நெஞ்சில பயமே இல்லாம எப்படிப் பேசறான் பாரு?
படிச்சதை எல்லாம் மனசில நல்லா பதிய வச்சுக்கோடா. அப்பதான் எல்லாம் ஞாபகத்தில் இருக்கும்.
அவருக்கு ரொம்ப தாராள மனசுங்க. இல்லேன்னு செல்லாம எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுப்பாரு.
இது போன்ற டயலாக்குகளை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். படித்தவர்கள்கூட இப்படித்தான் கேட்டிருக்கக்கூடும். படித்தவர்கள் கூட இப்படித்தான் புரியாமல் பேசிவிடுகிறார்கள். காதல், இரக்கம் போன்ற மென் உணர்ச்சிகளும், குணங்களும், நினைவாற்றலும் இதயத்தோடு தொடர்புடையவை என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதயமும், மனசும் ஒன்று என்பதும் நம் தவறான கருத்துகளும் ஒன்று.
உண்மையில் மேலே சொன்னவை எல்லாம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நான் இரண்டாம் வரியில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் இதயத்தின் அடிப்படையான வேலை. அதாவது நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு காரணம் இதயம். இதயம் பற்றிய விழிப்புணர்வு இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றியும், நோய்கள் தாக்காமல் அதைப் பாதுகாப்பது பற்றியும் எந்த அளவில் நாம் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை.
இப்படி ஒரு அறியாமை நிலவுவதால்தான் இதயம் தொடர்பான நோய்களுக்கு நம் நாட்டு மக்கள் மிக எளிதாக இலக்காகிவிடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இதய நோய்கள் இந்திய மக்களிடையே பரவும் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான உண்மையை உறுதிப்படுத்துவதும் வகையில் பெங்களூரைச் சார்ந்த உடல் நல அறிவியல் மையம் சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வெறும் அறிக்கை அல்ல, நாம் விழித்துக் கொள்வதற்காக அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள மொத்த இதய நோயாளிகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்தினர் இந்தியாவில்தான் இருப்பார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நம் நாட்டு பொருளாதாரத்துக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதும் அதில் உள்ள ஆபத்துகளுள் ஒன்று. இன்னொரு புள்ளி விவரத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் உள்ள இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஜப்பானில் உள்ள மக்களை விட 20 மடங்கு அதிகமாக நம் நாட்டு மக்கள் இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதய நோய்களைப் பொருத்தவரை இன்னும் பல சவாலான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மாரடைப்பால் (இதயத் தாக்கம்) பாதிக்கப்படும் இளம் வயதினரின் எண்ணிக்கை மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் அதிகமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கையும், வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மேலை நாடுகளில் மாரமைப்பு என்பது முதியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் நம் நாட்டில் இதயத் தாக்கம் என்பது இளம் வயதினரைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது.
உலக அளவில் பொருளாதார நிலையில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பெரும்பாலும் இதயத் தமனி நோய்களைத்தான் (Coronary Artery Diseases) இதய நோய்களாகக் குறிப்பிடுவார்கள். அங்கு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல், இதயத் தமனி தொடர்புடைய நோய்கள்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.
ஆனால் இந்தியாவில் ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்து அவர்களுக்கு ஏற்படும் இதயப் பாதிப்புகளும் வேறுபடுகின்றன. வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும், ஏழைமையில் உள்ள மக்களுக்கும் இதய வாழ்வுகள் தொடர்புடைய நோய்களும், வசதியானவர்களுக்குப் பெரும்பாலும் இதயத் தமனிகள் தொடர்புடைய நோய்களும் ஏற்படுகின்றன. எனவே இந்த இரண்டு வகையான பாதிப்புகளைச் சமாளிக்க இரண்டு வகையான மருத்துவ முறைகளை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்ற சவால்கள் போதாதென்று பொருளாதார அடிப்படையிலான சிக்கல்களும் நிலைமையின் தீவிரத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்திவிடுகின்றன.
இதய நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவை சாதாரண மக்களால் நினைத்துவிடக்கூட பார்க்க முடியாது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. அதோடு நோய் குணமாவதற்கான காலமும் அதிகம். காலமும், பணமும் அதிகமாகச் செலவாவதால் ஏற்படும் மன உளைச்சலும் நோயாளியைப் பாதிக்கும்.
இதய நோய்களுக்கான சிகிச்சை முறை ஏன் இவ்வளவு அதிகச் செலவானதாக இருக்கிறது என்பது உங்களின் நியாயமான கேள்வி. ஆனால் அதற்கொரு காரணம் இருக்கிறது. இதய நோய்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள், இதய செயற்கை வால்வுகள் மற்றும் இதய அறுவைச் சிகிச்சை முறைகளுக்குப் பயன்படுத்தப்படும் பலவகையான கருவிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது. மேலும் இதய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மிகவும் அதிகம்.
ஓர் இதய நோயாளிக்கு இதயத்துக்கான தீவிர மருத்துவப் பிரிவில் (INTENSIVE CARDIAC CARE UNIT) ஒரு நாள் ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட பல ஆயிரம் ரூபாய். வெளிநாடுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் முனைப்போடு செயல்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பெயரளவில் இருக்கின்றனவே தவிர, தீவிரமாகவோ, முழு முனைப்புடனோ அமல்படுத்தப்படவில்லை.
இதனால் நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான இதய நோயாளிகள், தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்த பணம், நகைகள், சொத்துகள், வீடுகள் போன்றவற்றைச் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டு மீதமுள்ள காலத்தை வறுமையில் கழிக்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலையே இப்படியென்றால் சிறிய நிலையில் உள்ள மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிகிச்சைக்கான பணத்தைத் தயார் செய்ய நிலைக்கு அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள்.
ஆரம்பத்திலேயே என்னன்னவோ சொல்லி பயமுறுத்துகிறீர்களே என்கிறீர்களா? உங்களைப் பயமுறுத்துவது எனது நோக்கமல்ல. எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தால்தான் இதய நலத்தின் மீதான அக்கறையும், எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் அதைப் பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் உங்களிடத்தில் ஏற்படும் என்பதற்குத்தான்.
விழிப்புணர்வு வந்தால் மட்டும் போதுமா? இதய நலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் தெரிய வேண்டாமா? என்பது உங்களின் அடுத்த சந்தேகம். அந்த வழிமுறைகளைப் பற்றி சொல்லித்தருவதுதான் இதந்தப் புத்தகத்தின் நோக்கமே.
அதன் அப்படையில் நம் வாழ்நாள் முழவதும் இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது? இதயத்தைப் பாதிக்கக்கூடிய தீய பழக்கவழக்கங்களை எவ்வாறு விலக்குவது? இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகளை எவ்வாறு குறைப்பது? இதயத்துக்கு உகந்த உணவு வகைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது? இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை எவ்வாறு மேற்கொள்வது? போன்ற பல உண்மைகளை நாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.

2. ரத்தத்தின் இயக்குநர்

மனித உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அற்புதமானது. இதயமும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைக்குப் பொறியியல் துறை அபாரமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் சிளைவாக பல அற்புதமான கண்டுபிடிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால் அந்தக் கண்டுபிடிப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் இயற்கை இதயத்தை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளது.
பொறியியல் துறையில் பயன்படும் எந்திரங்களுக்குப் பராமரிப்பு அவசியம். அப்போதுதான் அவை நீண்ட காலம் உழைக்கும். ஆனால் எவ்வகையான பராமரிப்பும் தேவையின்றி 70&80 ஆண்டுகள் வரை இதயம் இடைவிடாது உழைக்கக் கூடியது.
நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இதயம் காதல், இரக்கம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகளின் பிறப்பிடமாகவும், பொறாமை, மூர்க்கம், உதவி செய்தல் போன்ற குணங்களின் அஸ்திவாரமாகவும், நினைவாற்றலின் மையமாகவும் நீண்ட நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது.
மருத்துவம் பற்றிய அறிவு அவ்வளவாக வளராததால் ஏற்பட்ட அறியாமை இது. இந்த அறியாமை இன்றளவும் தொடர்வதுதான் வேடிக்கை.
மூளையும், நரம்புகளும் ஒன்றிணைந்த ஓர் அமைப்புதான் உணர்ச்சிகளின் பிறப்பிடமாகவும், நினைவாற்றலின் இருப்பிடமாகவும் விளங்குகிறது. இதயத்துக்கும், மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்பி வைப்பதுதான் இதயத்தின் முக்கியமான பணி. இந்தப் பணியைச் சீராக நிறைவேற்றும் வகையில் ஓர் அருமையான சிஸ்டம் இதயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதயத்தின் நலனைக் காப்பதற்கான முதல் படி, இந்த சிஸ்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதுதான்.
கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் கற்பனைத் திறனால் இதயம் ஓர் அழகான அமைப்பைக் கொண்டது என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல. வலுவான தசைகளால் ஆன இதயம். கரடு முரடான அமைப்பைக் கொண்டது. பழுப்பும், சிவப்பும் கலந்த நிறம் கொண்டது. பேரிக்காயின் வடிவம் உடையது.
இந்த அமைப்புக்குள் உள்ள ஒவ்வொரு நுணுக்கமான அம்சத்தையும் பார்க்கும் முன்பு கருவில் இதயம் எவ்வாறு உருவாகிறது என்பதையும் பார்த்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *