காலை உணவை தவிர்க்கக் கூடாது…ஏன்?

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல் நிபுணர் ஹேமமாலினி 5 காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது…

பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ‘பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான். நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும். காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும்? நீங்கள் எப்படி ஆரோக்கியமானவராக இருக்க முடியும்? எனவே, விரதத்தை முடியுங்கள்… காலையில்!

ஏனெனில், காலை உணவு என்பது எரிபொருள் நிரப்புவது…

நாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உங்கள் உடல் உங்களுக்கு உதவி செய்யும். அதனால், எரிபொருளை நிரப்புங்கள்!

ஏனெனில், காலை உணவு என்பது நோய்களை விரட்டுவது…

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகிவிடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும். தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால்ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்டுங்கள்.

ஏனெனில், காலை உணவு என்பது புத்துணர்வைத் தருவது…

காலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது. நம் உடலுக்குத் தொடர்ச்சியாக தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக அவசியம். அவசரமாக, ஏதாவது ஒன்றை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்தால் பள்ளியில் மந்தமாகவே இருப்பார்கள். படிப்பதிலும் பின்தங்குவார்கள். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், காலை உணவு என்பது உங்களை ராஜாவாக மாற்றுவது…

‘காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். காலை உணவின் முக்கியத்துவத்தைமருத்துவரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி இது. ராஜா மாதிரி என்றால் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில்கிடைத்துவிடும். இட்லியில் மாவுச்சத்தும், சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். ஆகவே, ராஜாவாகி விடுங்கள்!

காலை உணவுக்கு எது பெஸ்ட்?
காலை உணவு 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், உப்புமா, இடியாப்பம் போன்றவற்றில் ஏதாவது ஒரு உணவை சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். சாதம் சாப்பிடுவதோ, பழைய சாதம் சாப்பிடுவதோ தவறில்லை. ஆனால், வீணாகிவிடக் கூடாது என்று அதிகமாக சாப்பிட வேண்டாம்.

சப்பாத்தி, கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், பிரெட், சாண்ட்விச் போன்ற கான்டினென்டல் உணவுகளும் காலைக்கு ஏற்றவையே. சிப்ஸ், பப்ஸ் போன்ற ஜங்க் உணவுகள், இனிப்புகள் கட்டாயம் கூடாது. சிலர், காலை உணவாக பழங்கள் மட்டுமே சாப்பிடு வார்கள். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான்… ஆனால், அதிலிருந்து நார்ச்சத்து மட்டுமே கிடைக்கும். மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சரிவிகித சத்துகள் கிடைத்தால்தானே நல்ல உணவு. எனவே, பழங்களை மட்டும் சாப்பிடுவதும் தவறுதான்!

Originally posted 2016-01-11 05:47:44. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *