மருந்து, மாத்திரைகளை விட உணவு முறைகளை முறையாக பின்பற்றினாலே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம்.
பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், தக்காளி முதலியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
தக்காளி
நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
பாகற்காய்
பாகற்காயில் மூன்று வகைகள் உண்டு, நார்ச்சத்து கொண்டது.
இவை அனைத்துமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கக் கூடியவை ஆகும்.
பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் சேர்த்து சமைத்தால் கசப்பு தன்மை குறையும்.
பாகற்காயை அரிந்து உப்பு போட்டுக் காயவைத்து வற்றல் ஆக்கி பொறித்தும் சாப்பிடலாம்.
வெந்தயம்
வெந்தயம் எளிதில் கிடைக்ககூடியது. வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
அல்லது வெந்தயத்தை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது.
இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தையத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம்.
பழங்கள்
அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும்.
ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.
நாவல்பழம்- கொட்டை
நாவல்பழம் நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது.
சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல் அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம்.
சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.
அசைவ உணவு
அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும்.
மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.
வேப்பிலை
தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம்.
பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்து சாப்பிடலாம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிக அளவில் குறைக்கும் தன்மை கொண்டது. அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளும் அழித்து விடும்.