தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்

ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று. கிராம மக்களில் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் நீச்சல் தெரிந்திருக்கும்.

கிராமத்தைச் சுற்றி ஏரி, குளம், கிணறுகள் இருப்பதால் அவற்றில் நீந்தி நீச்சல் கற்றுக்கொள்வார்கள். நன்கு நீந்திக் குளிப்பதால் கிராம மக்கள் இன்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நகர மக்களில் வசதி படைத்தோர் நீச்சல் குளம் சென்று நீந்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்திற்கு இதுபோல் ஏதும் இல்லை. குளங்களும், ஏரிகளும் காணாமல் போய்விட்டன.

மீதம் இருக்கும் குளங்கள் சாக்கடைகளாக மாறிவிட்டன. இதனால் நீச்சல் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலைக்கு மாறிவிட்டனர் இன்றைய தலைமுறையினர். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சமயத்தில் இயங்கக்கூடிய ஒரே உடற்பயற்சி நீச்சல் தான்.

மார்பு நீச்சல் அல்லது தவளை நீச்சல்:

இது தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் நீச்சலாகும்.

விரைவு நீச்சல்:

இடுப்புப்பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும்.

பின்நீச்சல்:

கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும்.

வண்ணத்துப்பூச்சி நீச்சல்:

இதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.

நீச்சலின் பயன்கள்:

உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக்கூடியது. தொப்பையைக் குறைக்கும்.

* நீச்சலின்போது நீர் உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.

* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.

* உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.

* இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்புமுடிச்சுகள் பலம் பெறுகின்றன.

* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.

* செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறைப் போக்கும். நன்கு பசியைத் தூண்டச் செய்யும். மலச்சிக்கல் நீங்கும்.

* ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

Originally posted 2015-11-24 02:39:09. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *