இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை “பேஸ் மேக்கர்!’

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரைகைடு’ என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்தமாக எடுத்து செல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு மூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு, இதயம், 72 தடவை துடிக்கிறது.

இந்த இதயத் துடிப்பை உண்டாக்குவது, “பேஸ் மேக்கர்’ என்ற இயற்கையான இதய துடிப்பு. தனி சிறப்பு வாய்ந்த நரம்பு திசுக்களாலான இதை, “எஸ்.ஏ.நோடு’ என்கிறோம். இரண்டு மேலறையும், கீழறையும் கூடும் சந்திப்பில், “ஏ.வி.நோடு’ என்ற நரம்பு திசு உள்ளது. இது, “எஸ்.ஏ.நோடு’டன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, “ஹிஸ்பண்டில்’ என்ற திசு இருக்கிறது. இது, “ஏ.வி.நோடு’டன் இணைந்து இருக்கும். இடது கீழறையில், “லெப்ட் பண்டில்’ வலது கீழறையில், “ரைட் பண்டில்’ உள்ளது. இவை அனைத்தும், சிறு நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்.ஏ.நோடு என்ற இயற்கை பேஸ் மேக்கரிலிருந்து, மின்சார அலைகள், ஏ.வி.நோடுக்கு சென்று, “ஹிஸ்பண்டில்’ மூலமாக, இடது, “ரைட் பண்டிலை’ அடைந்து, இரண்டு அறைகள் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இந்த பேஸ்மேக்கர் சரியாக இயங்க, போதுமான அளவு ரத்தம் தேவை. இது குறைந்தால் தான் பிரச்னை. இதயத்தின் துடிப்பு, நிமிடத்திற்கு 60க்கு கீழ் போகக் கூடாது. துடிப்பு குறைந்தால், அது, “பிராடி கார்டியா’ எனப்படுகிறது. நிமிடத்திற்கு 60 துடிப்பு வரை இருந்தால், எந்த அறிகுறியும், சிக்கலும் வராது; நோயாளியும், ஒரு குறையும் கூற மாட்டார்கள். துடிப்பு, 40க்கு கீழ் வந்தால், அது, குறைந்த இதய துடிப்பு எனப்படும்.

மேலறை துடிப்பு அதிகமாக, கீழறை துடிப்பு குறைவாக, அதாவது, மேலறை துடிப்பு, நிமிடத்திற்கு 100க்கு மேலும், கீழறை துடிப்பு, நிமிடத்திற்கு 50க்கு கீழ் இருக்கும் போது, மேலறை துடிப்பு, கீழறைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது என அர்த்தம். இதைத் தான், “ஹார்ட் பிளாக்’ என்கிறோம். ஹார்ட் பிளாக் ஏற்பட காரணங்கள் பல. பிறவிலேயே வரும் ஹார்ட் பிளாக், சாதாரணமாக வரும் ஹார்ட் பிளாக். இதயம் மாரடைப்பால் பழுதடைந்தாலோ, நெஞ்சு வலி வந்தாலோ, இதயம் தாக்கப்பட்டாலோ, ஹார்ட் பிளாக் வரும். இதை, “கரோனரி இதய நோய்’ என்கிறோம். கரோனரி இதய நோய்க்கு காரணம், கரோனரி ரத்தக் குழாய் தமனி அடைப்பு, இதய தசைகள் நோயான மையோ கார்டைட்டிஸ், ஹார்ட் பெய்லியர், ரூமாட்டிக் காய்ச்சல், கார்டியோமயோபதி என்ற தசைகள் நோய், சார்காய்டோசிஸ், லெவிஸ், லெனெ கிரேடு ஆகிய நோய்கள். சில மருந்துகள் கூட, ஹார்ட் பிளாக்கை ஏற்படுத்தும். அவை, டிஜிட்டாலிஸ், பீட்டா பிளாக்கர்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ். சில இதய அறுவைச் சிகிச்சைகள், மரபு அணுக்கள் குறைபாடுகள், வேகஸ் என்ற நரம்பு கோளாறுகள் ஆகியவை, துடிப்பை குறைக்கும். இதய நோயாளிகள், இதய நிபுணர் ஆலோசனையில் இருக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இ.சி.ஜி., எடுத்து பார்க்க வேண்டும்.

ஹார்ட் பிளாக் அறிகுறிகள் (இரண் டாவது, மூன்றாவது டிகிரி பிளாக்குகள்): மயக்கம், தலை சுற்றல், தலைகனம், லேசாக தலை ஆடுவது, அசதி, பலமின்மை, மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, வலிப்பு ஆகிய அறிகுறிகள், முதன்முறையாக வந்தாலோ, அடிக்கடி வந்தாலோ, நிபுணரை அணுக வேண்டும்.

கண்டுபிடிப்பு: இது, இதய நிபுணருடைய வேலை. மேற்கூறிய அறிகுறிகள் மற்றும் இதனால் சிக்கல் ஏற்பட்டால், உடனடியாக நிபுணரை சந்திக்க வேண்டும். இ.சி.ஜி., மிகவும் முக்கியம். இதில் 90 சதவீதம், ஹார்ட் பிளாக்கை கண்டுபிடித்து விடலாம். நாடித் துடிப்பு பார்க்கும் போது, துடிப்பு குறைவாக உள்ளது என அறிந்தவுடன், நிபுணரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும். ஹார்ட் பெய்லியர் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

பரிசோதனைகள்: இ.சி.ஜி., என்ற மின்னலை வரைப்படம், 24 மணி நேர இ.சி.ஜி., எடுக்கும் ஹால்ட்டர் பரிசோதனை, எலக்டேரோ பிசியாலஜி என்ற இ.பி., மற்றும் ஆஞ்சியோகிராம்.

ஹார்ட் பிளாக் சிக்கல்கள்: “ஸ்ட்ரோக் ஆடம்’ என்ற மயக்கம் வந்தால், வலிப்பு உருவாக, மரணம் ஏற்படும். ரத்த கொதிப்பு குறைந்து, அதன் விளைவாக, ஹார்ட் பெய்லியர், மயக்கம், டார்சி டீ பான்ஸ் என்ற வேகமான துடிப்பு ஏற்பட்டு, இதயம் நின்று விடுதல்.
செயற்கை பேஸ் மேக்கர் என்றால் என்ன? எப்படி செயல்படும்? அடுத்த வாரம் பார்ப்போம்.
பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி., டி.எம்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *