காலை உணவுக்கு நோ… உடல்பருமனுக்கு வெல்கம்!

‘காலையில பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்கிப் பண்ணிடுவேன். ஜஸ்ட் ஃப்ரூட் ஜூஸ் மட்டும்தான்!’ – சமீபகாலமாக இந்த டிரெண்ட் உருவாகி வருகிறது.

ஆனால், ”காலை உணவைத் தவிர்ப்பது என்பது, கண்டிப்பாகக் கூடாது. இப்படி தவிர்ப்பது ஒபிசிட்டி எனும் உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும்” என்று எச்சரிக்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

”காலையில் நம் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் என்பதால், காலை உணவைத் தவிர்ப்பது சோர்வையே தரும். காலை உணவை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்கிறோமோ, அதேவேகத்தில் உடலானது விரைவில் இயங்க ஆரம்பித்துவிடும். தேவையான நியூட்ரிஷன்களும் உடலுக்குக் கிடைக்கும்.

உணவைத் தவிர்ப்பதால், செல்களுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதன் காரணமாக செல்கள் சோர்வடைந்து, பேசல் மெட்டபாலிக் ரேட் (அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம்) குறையும். இதுவே பருமன் நோய்க்கு வரவேற்பு வைக்கும். கூடவே, காலையில் சாப்பிடாதவர்கள் மதியம் மற்றும் இரவு உணவை ஹெவியாக எடுத்துக் கொள்வார்கள். இதுவும் சேர்ந்துகொண்டு உடல் எடை அதிகரித்து, நோய்க்கு துணைபுரியும்.

இரவு உணவுக்குப் பிறகு, தொடர்ச்சியாக நீண்டநேரம் ஓய்வெடுக்கும் ஜீரண உறுப்புகளுக்கும், உடம்புக்கும், காலை நேர உணவு முக்கியமாகிறது. இப்படி நீண்ட நேரம் கழித்து சாப்பிடும் காலை உணவு, திட உணவாக இருப்பது மிகவும் நல்லது. திரவ ஆகாரம் சீக்கிரம் செரிமானம் அடைந்துவிடுவதால், ஜூஸ் போன்ற திரவ ஆகாரத்தை மட்டும் குடிப்பது அபாயத்தையே விளைவிக்கும். எனவே, காலை உணவானது புரோட்டீன், விட்டமின், மினரல், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்” என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி,

”சிலர், இரவு நேர உணவையும் தவிர்ப்பார்கள். இதுவும் தவறுதான். பெரும்பாலும் இரவில் இட்லி, உப்புமா, கோதுமை, பருப்பு சேர்த்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பழச்சாறு சாப்பிடாமல், பழங்களாக சாப்பிடலாம். அப்போதுதான் நார்ச்சத்து கிடைக்கும். தினமும் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறம் என மூன்று வகையான பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. இவை, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். ஆனால், இரவில் பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லதல்ல. இது சரி விகித உணவாக இருக்காது” என்று சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *