கருப்பைவாய் புற்றுநோயை விரட்டும் மருந்து!

இந்தியாவில் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது, கருப்பைவாய்ப் புற்றுநோய். ஒரு பேரிக்காய் அளவில் இருக்கின்ற கருப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில் ‘செர்விக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பைவாய் உள்ளது. ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – சுருக்கமாக HPV) என்கிற கிருமி இந்த இடத்தைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது.

இந்த வைரஸ் கிருமி பாலுறவு மூலமே பரவுகிறது. பொதுவாக இது ஒருவரைத் தாக்கும்போது, அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், புற்றுநோய் வருவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்தக் கிருமி கருப்பை வாயை ஆக்கிரமித்து, சிறிது சிறிதாக அங்குள்ள செல்களைத் தாக்கி புற்றுநோயை உண்டாக்குகிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாக காத்திருந்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, வீரியம் பெற்று தாக்குதல் நடத்துகிறது. அப்போது அவர்களுக்குப் புற்றுநோய் வருகிறது.

இது எல்லா பெண்களுக்குமே ஏற்படுவதில்லை. மிக இளம் வயதில் பாலுறவில் ஈடுபடும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள், கொனேரியா, எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் உள்ள பெண்கள் ஆகியோரைத்தான் அதிகம் பாதிக்கும். இந்த நோய் பாதித்த பெண்களுக்கு அடிவயிறு கனமாக இருக்கும். வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்படுவதும், கட்டி கட்டியாக ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோய்க்கே உரித்தான அறிகுறிகள். சிலருக்கு அசாதாரணமான வயிற்றுவலி அடிக்கடி வரும். பாலுறவின்போது அதிக வலி ஏற்படுவதும், ரத்தக்கசிவு உண்டாவதும், இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் திடீரென ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோயை அடையாளம் காட்டும் அறிகுறிகளே.

துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல், இந்த நோய் முற்றியுள்ளதைத் தெரிவிக்கின்ற முக்கிய அறிகுறி. மாதவிலக்கு நின்ற பிறகு திடீரென்று ரத்தப்போக்கு ஏற்படுமானால் இந்த வகைப் புற்றுநோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது. பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். திருமணமான எல்லாப் பெண்களும் ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 65 வயது வரை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். மாதவிலக்கு முடிந்து 7 முதல் 14 நாட்களுக்குள் இந்தச் சோதனையைச் செய்துகொள்ளலாம். இது கருப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடும். இதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

இந்தப் புற்றுநோய் வராமலே தடுக்க ‘குவாட்ரி வேலன்ட் தடுப்பூசி’ (Quadrivalent Vaccine), ‘பை வேலன்ட் தடுப்பூசி’ (Bivalent Vaccine) என இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 10 வயது முடிந்த சிறுமி களுக்கு இந்தத் தடுப்பூசிகளில் ஒன்று போடப்பட வேண்டும். திருமணத்துக்கு முன்பே – அதாவது பாலுறவில் ஈடுபடுவதற்கு முன்பே இந்தத் தடுப்பூசிகளில் ஒன்றைப் பெண்கள் போட்டுக் கொண்டால், இந்தப் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இவற்றில் ‘குவாட்ரி வேலன்ட் தடுப்பூசி’யைக் கண்டுபிடித்தவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி இயன் ஃபிரேசர் (Ian Frazer). இவர் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். பொதுவாக ஒரு கிருமியைக் கொன்று அல்லது அதை வீரியமிழக்கச் செய்து, மிகச்சிறிய அளவில் உடலுக்குள் செலுத்துவார்கள். அப்போது அந்தக் கிருமிக்கு உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாகி, அந்தக் கிருமி ஏற்படுத்தும் நோய்க்குத் தடுப்பு சக்தி கிடைத்துவிடும். இதுதான் தடுப்பூசி வேலை செய்வதற்கான அடிப்படை விஷயம்.

ஆனால், ஃபிரேசர் ஹெச்பிவி கிருமியின் வெளிச்சுவரில் காணப்படும் ஒரு புரதப்பொரு ளைப் போலவே ஒரு புரதத்தைச் செயற்கையாகத் தயாரித்து, அதைத் தடுப்பூசி மருந்தாகச் செலுத்தினார். இதற்கும் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாவதைக் கண்டறிந்தார். இதன்பின் உடலில் ஹெச்பிவி கிருமிகள் நுழைந்தாலும் புற்றுநோய் ஏற்படாது என்பதை நிரூபித்தார். தடுப்பூசி தயாரிப்பில் இது ஒரு புதுமை. 1991ல் இவர் தயாரித்த இத்தடுப்பூசி இன்றைக்கு கோடிக்கணக்கான பெண்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த முன்னேற்றம் 2010ல் நிகழ்ந்தது. லண்டனில் இயங்கும் கிளாக்ஸோ ஸ்மித்கிளின் நிறுவனம் இதே மாதிரியான வைரஸ் புரதப் பொருளைப் பயன்படுத்தி ‘டிஎன்ஏ மறுசேர்க்கை’ எனும் தொழில்நுட்பத்தில் வேறொரு தடுப்பூசி மருந்தைத் தயாரித்தது. இதற்கு ‘பை வேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். இத்தடுப்பூசியை இப்போது ஆண்களும் போட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதைப் போட்டுக்கொள்ளும் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் மரு தோன்றுவது தடுக்கப்படுகிறது. வாய், தொண்டை, ஆசனவாய் போன்ற இடங்களில் ஹெச்.பி.வி. கிருமிகளால் ஏற்படும் புற்றுநோய் வராது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் முறை

பெண்கள் 10 வயது முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ‘குவாட்ரி வேலன்ட் தடுப்பூசி’யைப் போடுவதாக இருந்தால் முதல் ஊசிக்குப் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும். ‘பை வேலன்ட் தடுப்பூசி’ யைப் போடுவதாக இருந்தால், முதல் ஊசிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *