அர்த்த சந்த்ராசனம்

நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒரு யோகாசனம் பற்றி அறிந்து வருகிறோம். சந்த்ராசனம் என்று அழைக்கப்படும் யோகாசனத்தைப் பற்றி அறிவோம்.

அர்த்த சந்த்ராசனம்:

சமஸ்கிருதத்தில் அர்த்த என்றால் பாதி என்று பொருள். சந்திரா என்றால் நிலா என்று பொருள். இந்த ஆசனம் பாதி நிலா வடிவில் இருப்பதால் இதனை அர்த்த சந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.

முதலில் விரிப்பின் மீது காலை அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும். வலது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையை மேல்புறமாக நோக்கி உங்களது இடதுபுறத்தில் நேராக கொண்டு செல்லவும். அப்போது உங்களது இடது கையை இடது காலின் முட்டியைத் தாங்கிக் கொள்ளும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் மூச்சானது சாதாரண நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருசில நிமிடங்கள் இருந்து விட்டு பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அதுபோல் இடது கையை நீட்டி வலது புறமாகக் கொண்டு வந்து வலது கால் முட்டியை வலது கையால் தாங்கி மூச்சை சாதாரண நிலையில் இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலின் முதுகுத் தண்டு இடப்புறமும், வலப்புறமும் மாறி, மாறி வளைவதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நரம்புகள் வலுப்பெறும். கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குவதுடன் உடல் பலமடையும்.

தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும். நன்கு பசியைத் தூண்டும், அஜீரணத்தைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்களைப் போக்கும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *