21வயதில் நடுக்கம் கூடாது அலட்சியம் வேண்டாம்!

வயது, 21. என் கை, கால்கள் சாதாரணமாக நடுங்குகிறது; ஒரு வேலை செய்ய பல மணிநேரம் ஆகிறது. இதற்கு காரணம், சத்து குறைபாடா; நரம்பு தளர்ச்சியா என, தெரியவில்லை. சரி செய்ய முடியுமா? எத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்?

– பார்த்திபன், திண்டிவனம்.
கை, கால்கள் நடுக்கம் என்பது, வயதான காலத்தில் வரக்கூடியது. 21 வயதில் வந்துள்ளது என்றால், அலட்சியம் வேண்டாம்; மிகுந்த கவனம் வேண்டும். நடுக்கத்திற்கு நரம்பு பாதிப்பே காரணம்; ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இந்த பாதிப்பு வரலாம்.

நீங்கள் திண்டிவனத்தில் இருப்பதால், பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை சென்று, நரம்பியல் நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெறலாம். பயப்பட வேண்டாம்; முறையாக சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும்.

எனக்கு, 15 ஆண்டுகளாக வலிப்பு நோய் உள்ளது. மாத்திரை சாப்பிடுவது, குறைப்பது, நிறுத்தி விடுவது; மீண்டும் வேறு மாத்திரை சாப்பிடுவது என்ற நிலையில் உள்ளேன். மாத்திரையை நிறுத்தினால் ஓரிரு முறை வலிப்பு வருகிறது; மாத்திரை சாப்பிட்டால் நின்று விடுகிறது. கல்லூரி படிக்கும் எனக்கு நிரந்த தீர்வு கிடைக்காதா? அலோபதியை விட்டு வேறு சிகிச்சைக்கு மாறலாமா?

– பெயர் விரும்பாத வாசகர், சென்னை.
முதலில் உங்களுக்கு நோய் தீரும் என்ற நம்பிக்கை வேண்டும். மாத்திரையை இடையில் நிறுத்துவது; வலிப்பு வந்ததும் மீண்டும் மாத்திரை சாப்பிடுவது என்ற நடைமுறை சரிப்பட்டு வராது. மாத்திரையை இஷ்டம்போல் மாற்றக்கூடாது; டாக்டரின் ஆலோசனை அவசியம். அலோபதி மருத்துவத்தில், முற்றிலும் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த முடியும். நரம்பியில் டாக்டரின் ஆலோசனை பெற்று, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை, இடைவிடாது மாத்திரை சாப்பிட வேண்டும். இனியாவது, டாக்டர் ஆலோசனையை முறையாக பெற்று, இடை இடையே நிறுத்தாமல் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுங்கள்; வலிப்பு நோய் நீங்கும்.
டாக்டர். கே.பானு
நரம்பியல் நிபுணர், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *