ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

வாழ்த்துக்கள்! நீங்கள் தாயாகப் போகிறீர்கள் என்றதும், சந்தோஷத்தில் ஏறக்குறைய திவ்யா அழுது விட்டார். கூடவே இருந்த கணவருக்கும், அதே மனநிலை. காரணம், திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து தாய்மையடைந்தார் திவ்யா.

மருத்துவ சிகிச்சைக்காகவும், ஆலோசனைக்காகவும் சரியான இடைவெளிகளில் என்னை சந்திப்பார். ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்வார்.

என்னை, 24வது வாரத்தில் சந்தித்த போது, திவ்யாவிற்கு ரத்தத்தில் குளுக்கோசின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்யச் சொன்னேன். பரிசோதனையின் முடிவில், திவ்யாவிற்கு, ‘கர்ப்பக்கால நீரிழிவு’ இருப்பது தெரிய வந்தது. இதை அறிந்ததும் திவ்யாவிற்கு அதிர்ச்சி.
கர்ப்ப காலத்தை மூன்று கட்டங்களாக பிரிப்போம். பெரும்பாலும், கர்ப்பத்தின் இரண்டாவது காலக்கட்டத்தின் கடைசி நான்கு வாரத்தில், அதாவது, 24வது வாரம் முதல் 28வது வாரம் வரை, கர்ப்பக்கால நீரிழிவு உள்ளதா என்பதை பரிசோதிப்போம்.

காரணம், நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை, இன்சுலின் என்னும் ஹார்மோன் சக்தியாக உருமாற்றுகிறது. மேலும் கர்ப்பத்தின் போது, நஞ்சுவினால் சுரக்கப்படும் சில ஹார்மோன்கள், தாயின் உடலில் இன்சுலினை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன.

இதனால், இன்சுலினுக்கான தடை அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படும். அதிக வயது, உடல் பருமன், பரம்பரை, சினைப்பை நீர்க்கட்டி, முந்தைய பிரசவத்தில் அதிக எடையுள்ள குழந்தை பெற்றோருக்கு, ‘ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்’ எனப்படும், கர்ப்பக்கால நீரிழிவு ஏற்படும் ஆபத்து, மற்றவர்களை காட்டிலும் அதிகம்.

இன்றைய தலைமுறை இந்தியப் பெண்களில் பலரும், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பின், இந்த நீரிழிவு காணாமல் போய்விடும். என்றாலும் கூட, இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல, என்பதையும் திவ்யாவுக்கு சொன்னேன்.

காரணம், கர்ப்பக்கால நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எதிர்காலத்தில், 50 சதவீதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கர்ப்பக்கால நீரிழிவினால், கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதுமட்டுமல்லாமல், பனிக்குடத்தில் நீர் அதிகமாகி, குறைமாத குழந்தை பிறக்கக்கூடும்.

தாயிடமுள்ள அதிகப்படியான சர்க்கரை, நஞ்சுக் கொடி வழியாக குழந்தைக்கு செல்லும், இதனால், குழந்தைக்கு சர்க்கரை அதிகமாகி, கொழுப்பு சக்தியாக, குழந்தையின் உடலில் அடுக்குகளாக பதிந்து, அதிக எடையுள்ள குழந்தைகள் உருவாகின்றன.
இந்த குழந்தைகள் பிரசவத்தின் போது, கர்ப்ப வாசல் வழியாக வெளிவர முடியாது. அறுவை சிகிச்சை முறையில் பிறக்கின்றனர்.

திவ்யா, சரியான மருத்துவ ஆலோசனையோடு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் நடைப் பயிற்சியில் இருந்ததால், அவரது நீரிழிவு கட்டுக்குள் இருந்தது.

சில கர்ப்பிணிகளுக்கு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில், சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், இன்சுலின் கட்டாயம் எடுக்க வேண்டும்.

தொடர் கண்காணிப்பில் இருந்த திவ்யா, 40வது வாரத்தில், சுகப் பிரசவத்தில், 3 கிலோ எடையில், அழகான பூச்செண்டு போல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் என, ஆனந்த கண்ணீர் விட்டனர், திவ்யா குடும்பத்தினர்.

– எஸ்.ராஜஸ்ரீ,
மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்,

தி.நகர், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *