நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

வேலைகளில் பலவகை உள்ளன. உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலை, நடந்து கொண்டே பார்க்கும் வேலை, நின்று கொண்டே பார்க்கும் வேலை என்று பல. இதில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வேலை எவ்வளவு ஆபத்தோ, அதேபோல நாள் முழுக்க நின்று கொண்டே பார்க்கும் வேலையும் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதிதான்.

வெகு நேரம் நிற்கும் போது வெரிகோஸ் வெயின் என்ற நோய் வர வாய்ப்புள்ளது. இந்த நோய் கால் மூட்டுக்கு கீழே நரம்பு முடிச்சுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் காலில் வலி, வேதனை, குடைச்சல் போன்ற உணர்வு ஏற்படும். அது மட்டுமின்றி நின்று கொண்டே பணிபுரியும் பலருக்கும் சிறிது நேரம் கிடைத்தால் உட்காரலாம் என்று தோன்றும். ஆனால், அதற்கான இருக்கை எதுவும் அந்த இடத்தில் இருக்காது. அதனால் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது அமரமுடியாமல் தொடர்ந்து நின்று கொண்டே இருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளில் இருக்கைகள் கொடுத்தால் வேலை கெடும் என்பதாலும், இடத்தை வேறு அது அடைத்துக்கொள்ளும் என்பதாலும் இருக்கைகள் தரப்படுவதில்லை. இதெற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருக்கிறது பயோனிக் பேண்ட் என்ற உடலோடு ஒட்டிய சேர். கெயித் கன்னுரா என்பவர்தான் இதைக் கண்டுபிடித்தார். தற்போது 29 வயதாகும் இவர், தனது 17-வது வயதில் பேக்கிங் கம்பெனி ஒன்றில் நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்தார். அப்போது ஏற்பட்ட வேதனை தான், இத்தகைய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பை தன் நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த இருக்கையை ஒரு காலுக்கு ஒரு பயோனிக் பேண்ட் வீதம், இரண்டு பேண்டுகளை அணிந்து கொள்ள வேண்டும். இந்த பேண்ட் இடுப்பின் எடையை அப்படியே குதிகாலுக்கு அனுப்பி விடுகிறது. இதனால் நமக்கு உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

இதை அணிந்துக் கொண்டு சாதாரணமாக நடக்கலாம், ஓடலாம் எல்லா வேலைகளையும் செய்யலாம். இடத்தையும் அடைக்காது. நாற்காலி இல்லாமலே வெறும் காற்றில் வெட்ட வெளியில் அமரலாம். இந்த பயோனிக் பேண்ட் இயங்க ஒரு பேண்டுக்கு ஒரு ஆறு வோல்ட் பேட்டரி தேவை. இந்த பேட்டரியின் சார்ஜ் 24 மணி நேரம் வரை நிற்கும். இனி கால் வலியில்லாமல் நின்று கொண்டே வேலை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *