பித்தப்பை கல்லை அகற்ற புதிய சிகிச்சை

ராமசாமி ஒரு கிராமவாசி. நடுத்தர விவசாயி. வயது ஐம்பது. அவருக்குக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி, பசிக்குறைவு, சோர்வு என சில அறிகுறிகள் தெரிந்தன. சிறுநீர் மஞ்சளாகப் போனது. கண்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறின.

மலம் வெள்ளை நிறத்தில் போனது. காமாலை நோயாக இருக்குமோ என்று சந்தேகித்து, அரிசிச் சோற்றில் சிறுநீரைவிட்டுப் பார்த்தார். அது மஞ்சள் நிறத்துக்கு மாறியது.

ராமசாமி தனக்கு வந்துள்ள நோய் மஞ்சள் காமாலைதான் என்று உறுதி செய்தபிறகு, தன் கிராமத்தில் இருக்கும் ஒரு மருத்துவப் பாட்டியிடம் பச்சிலைச் சாறு குடித்தும் பச்சிலையைத் தலையில் தேய்த்தும் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

ஒரு மாதம் ஆகியும் காமாலை குணமாகவில்லை. ஊரில் உள்ள பெரியவர்கள் கையில் சூடு போட்டு, கண்ணில் கஷாயத்தை ஊற்றிக்கொண்டால் காமாலை சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அதையும் செய்தார். ஆனாலும் குணமாகவில்லை.

அப்போது அந்தக் கிராமத்துக்கு விடுமுறையில் வந்த ஒரு மருத்துவ மாணவன் ராமசாமியின் உடல்நிலை அறிந்து விசாரித்துவிட்டு, ‘உங்களுக்கு அடைப்புக் காமாலை வந்துள்ளது. இதற்கு பச்சிலைச் சாறு சரியான மருந்து கிடையாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி” என்று சொல்லி, அவரை சென்னைக்கு அழைத்துச்சென்று நோயைக் குணப்படுத்தி அனுப்பினான்.

‘அது என்ன அடைப்புக் காமாலை?’

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் மஞ்சள் காமாலையின் அடிப்படை அறிவியலைக் கொஞ்சம் ரிந்துகொள்வோம்.கல்லீரலில் பித்தநீர் (Bile) சுரக்கிறது. இது கொழுப்புணவு செரிமானத்துக்கு உதவுகிறது.

அதேவேளையில் ‘பிலிருபின்’ (Bilirubin) எனும் நிறமிப் பொருளையும் கல்லீரல் சுரக்கிறது. இது பித்தநீர் வழியாக உடலிலிருந்து வெளியேறுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்துவிடுவதை ‘மஞ்சள் காமாலை’ என்று கூறுகிறோம். காமாலையில் பல விதங்கள் உண்டு.

‘தொற்றுக் காமாலை’ (Infective jaundice) வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் வருகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வகை காமாலைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ‘ரத்த அழிவுக் காமாலை’ (Haemolytic jaundice) என்று ஒரு வகை இருக்கிறது. ரத்தச் சிவப்பணுக்கள் அளவுக்கு மீறி அழிந்து போவதால் வருகிற காமாலை. ரத்தவகை ஒவ்வாமை, கடுமையான மலேரியா, தலசீமியா போன்ற நோய்களின்போது இது ஏற்படுகிறது.

‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice) என்று இன்னொரு வகை இருக்கிறது. கல்லீரலில் சுரக்கின்ற பித்தநீர் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச நேரம் தங்குகிறது. பிறகு பித்தக்குழாய் வழியாக முன் சிறுகுடலுக்கு வந்து சேர்கிறது. இந்தப் பாதை சரியாக இருந்தால்தான் பித்தநீர் குடலுக்கு வந்து கொழுப்பு உணவைச் செரிக்கும். சில சமயங்களில் இந்தப் பாதை அடைத்துக் கொள்ளும்; அப்போது பித்தநீர் ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரும். இதுதான் அடைப்புக் காமாலை.

பித்தநீர்ப் பாதை அடைத்துக்கொள்வதற்கு பித்தப்பையில் இருக்கின்ற கற்கள் அல்லது புற்றுநோய் ஒரு காரணமாகலாம். பிறவியிலேயே பித்தக்குழாய் அமைப்பில் குறைபாடு இருக்கலாம். பித்தக்குழாய் அழற்சி மற்றும் கணைய அழற்சியின்போதும் இம்மாதிரி அடைப்பு ஏற்படலாம். இந்த அடைப்பினால் பித்தநீர் குடலுக்குச் செல்ல முடியாமல் ரத்தத்தில் கலந்து காமாலையை ஏற்படுத்தும். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே சரியான தீர்வு தரும்.

முன்பெல்லாம் பித்தப்பைக் கற்களை அகற்ற, வயிற்றைக் கிழித்துப் பொது அறுவை சிகிச்சை செய்து கற்கள் உள்ள பித்தப்பையையே வெளியில் எடுத்துவிடுவது வழக்கம். இதற்கு பத்து நாட்கள் வரை நோயாளி மருத்துவமனையில் தங்க வேண்டும். அறுவை சிகிச்சை வலி, வயிற்றில் நீண்ட தழும்பு ஏற்படுவது, மீண்டும் பணிக்குத் திரும்புவதில் கால தாமதம் போன்ற பிரச்னைகள் இருந்தன. இப்போது இதற்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சை அறிமுகமாகியுள்ளது.

அதற்கு ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி’ (SpyGlass cholangioscopy) என்று பெயர். ‘கொலாஞ்சியோஸ்கோப்பி’ என்பது எண்டோஸ்கோப்பியில் ஒருவகை. சுமார் 9 மில்லிமீட்டர் சுற்றளவுள்ள ஒரு நீண்ட குழாய் இது.

பிவிசி ரப்பர் குழாயில் பல அடுக்கு மின்சார வயர்களைச் செலுத்தியிருப்பதைப்போல இதனுள், வெளிச்சம் செலுத்த, காட்சிகளைப் பிரதிபலிக்க, அடைப்பு ஏற்பட்டால் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க, காற்றைச் செலுத்த, கட்டியை சாம்பிள் எடுக்க என்று அடுக்கடுக்கான வேலைகளை செய்ய பல வயர் அமைப்புகள் உள்ளன.

கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இக்கருவியை மருத்துவர் வெளியில் இருந்தபடியே இயக்குவார். உணவுப்பாதையில் என்ன பிரச்னை உள்ளது என்பதைக் கண்ணால் நேரடியாகப் பார்க்க இந்தக் கருவிக்குள் இருக்கின்ற ஃபைபர் ஆப்டிக் கண்ணாடித் தொகுப்புகள் தரும் வெளிச்சம் உதவுகிறது.

வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பிவிட்டு, கார் ஸ்டியரிங்கைத் திருப்புவதைப்போல, வெளியில் இருக்கும் சுவிட்சைத் திருப்பி ‘நேராகச் செல்’. ‘இடதுபுறம் திரும்பு’, ‘வலதுபுறம் திரும்பு’, ‘வளை’, ‘குனி’, ‘நிமிர்’ என்று கட்டளை பிறப்பிப்பார். உணவுக்குழாயிலிருந்து இரைப்பை, முன்சிறுகுடல் வரைக்கும் பல வளைவுகள் இருக்கின்றன.

இந்தக் கருவி இவற்றை எல்லாம் கடந்து பித்தக் குழாய் வழியாக பித்தக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களைச் (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, கற்களின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுக்கும். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படும். இதன் பலனால் மஞ்சள் காமாலை முற்றிலும் சரியாகும்.

இந்தக் கருவியால் இன்னொரு நன்மையும் உண்டு. பித்தப்பையிலோ, பித்தநீர்ப் பாதையிலோ புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், எண்டோஸ்கோப் கருவியின் உள்முனையில் இடுக்கி மாதிரி ஒரு கருவியை வைத்து அனுப்பி அந்த இடத்தில் உள்ள திசுவிலிருந்து சிறிய அளவில் சாம்பிள் வெட்டி எடுத்து அதைப் பரிசோதித்து, அது புற்றுநோய்தானா அல்லது வேறு ஏதாவதா என்று மிகத் துல்லியமாகச் சொல்ல முடியும். இந்த நவீன சிகிச்சை இப்போது சென்னையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *