இருமல் மருந்துகள்

ப்ரிஸ்க்ரிப்ஷன்

  • இருமல் என்பது காற்றுப்பாதையை அடைப்பிலிருந்து சுத்தம் செய்வதற்காக ஏற்படும் ஓர்  இயற்கையான பாதுகாப்பு செயலே.
  • கிருமிகளாலான சளியோ… காற்றின் தூசி, புகை, மற்ற (கெமிக்கல்) வேதியியல் மூலக்கூறுகளால் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதற்கோ…
  • காற்றுப் பாதையில் அடைபடும் உணவு போன்ற திடப்பொருட்களை காற்றுப் பாதையிலிருந்து அகற்றுவதற்காகவோ, சுவாசத்தை சீராக்குவதற்காகவோ இருமல் ஏற்படும். ஆஸ்துமாவினால் ஏற்படும் இருமல் சுவாசக்குழாய் மூச்சுக்காற்றை வெளியிடும்போது சுருங்குவதால் ஏற்படும். இவையெல்லாம் சுவாசப் பாதை கோளாறினால் ஏற்படும்.

  • இதய நோயினால் நுரையீரலில் நீர் கோர்ப்பதாலும் இருமலும் மூச்சு அடைப்பும் ஏற்படும். இதை இதய ஆஸ்துமா என்பார்கள். இதற்கு இருமல் மருந்துகளைவிட நீரை வெளியேற்றும் மருந்துகளே சிறந்தவையாகும்.

சுவாசப் பாதையில் ஏற்படும் இருமலை, சளி வராத வறட்டு இருமல் (Dry cough), சளியுடன் கூடிய இருமல் (Productive cough) மற்றும் ஆஸ்துமாவினால் காற்றுப் பாதை சுருங்குவதால் ஏற்படும் இருமல் (Allergy,  Bronchodilator cough) என அதனதன் காரணங்களில் இருந்தே இருமல் மருந்துகளை, மருத்துவர் ஸ்டெதஸ்கோப்  மூலமாக கேட்டு உறுதிபடுத்தியபின் எழுதித் தருவார்.

எதனால் இருமல்,  என்ன இருமல் என்று தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்து பாட்டிலை உபயோகப்படுத்துவதால் இருமல் குறையாது. மருத்துவரிடம் செல்வதைத் தள்ளிப்போடுவதால் நோயும் உபாதையும் அதிகமாகும். அதோடு, விலை கூடிய தேவையற்ற இருமல் மருந்துக்கும் செலவு தனி. இருமலானது சுவாசக் குழாயின் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்து மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், மிகுந்த சளியுடன் அல்லது சளி இல்லாமல் நுரையீரலிலிருந்து என இருமல் சத்தமே மருத்துவருக்கு நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைக் காட்டிக் கொடுத்துவிடும்.

புகை பிடிப்பவர்களின் இருமல்… காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக இருமுவதை வீட்டினரே கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக கிருமிகள் இருக்கும்பட்சத்தில் அவ்வப்போது என ஆரம்பிக்கும் இருமல் ஒரே இடத்தில் ஆழமாக பரவும்போதோ, மூக்கிலிருந்து தொண்டை அல்லது சுவாசப்பாதை என பரவும்போதோ தொடர்ச்சியாக மூச்சுவிடக் கஷ்டப்படுத்தும் அளவுக்கு இருமலாக மாறும். இரவில் படுப்பதற்கு முன்பு, காற்றுப் பாதைகளை சுருங்கச் செய்யும் நெடிகளான நறுமண ஸ்பிரே, வாசனைத் திரவியங்கள், வீடுகளில் உபயோகப்படுத்தும் நெடியுடன் கூடிய சுத்தம் செய்யும் நவீன கெமிக்கல்ஸ் ஆகியவற்றுக்கும் ஆஸ்துமா போன்ற இருமல் வரலாம்.

கிருமிகளால் வரும் இருமலுக்கு சரியான நேரத்தில் சரியான கிருமி நாசினிகளை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக்கொண்டாலே இருமல் மருந்துகள் தேவையில்லாமல் போய்விடும்.

  • அலர்ஜியினால் வரும்  சளி இல்லாத (Dry cough) வறட்டு இருமலுக்கு கொடுக்கும் மருந்துகள் இருமலுக்கு காரணமான இடங்களை இருமல் காரணிகளிலிருந்து மட்டுப்படுத்துவதால் இருமலைக் குறைக்கும்.
  • 2. சளி பிடித்த பிறகு தாமதமாக சிகிச்சை செய்வதால் சளி இன்னும் அதிகமாகி காற்றுப்பாதையை அடைக்கும் அளவுக்கு அதிகமாகும். ஒவ்வொரு இருமலுக்கும் கட்டி கட்டியாக சளி வெளியேறும் இருமலுக்கு என சளியையும் குறைத்து, இருமலையும் குறைக்கும் மருந்துகள் உள்ளன.
  • சில இருமல் மருந்துகள் மூளையில் இருமலை கட்டுப்படுத்தும் மையங்களை செயல் இழக்கச் செய்வதன் மூலம் ஆக்ரோஷமான இருமலைக் கட்டுப்படுத்தி நோயாளியை தூங்கச் செய்வதற்கும், வயிற்றில் அறுவை   சிகிச்சை செய்து கொண்ட   நோயாளிகளின் காயங்களை காப்பாற்றவும், இதய நோய் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் ரணங்களை ஆற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆஸ்துமா இருமலில் நுரையீரல், காற்றுப்பாதை சுருங்குவதும், நீர் கோர்ப்பதும், காற்றுப் பாதையின் உள்சுவர்கள் வீங்குவதும்தான்

மூச்சுத்திணறலுக்கு காரணமாகின்றன. ஆகவே இதற்கான Bronchodilator எனப்படும் மூச்சுக் குழாயை விரிக்கும், அலர்ஜியையும் சளியையும் குறைக்கும் மருந்துகள் அடங்கிய இருமல் மருந்துகளே ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தீர்வு தரும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் இன்ஹேலர் (inhaler) எனப்படும் காற்றில் கரையும் மருந்துகளே மிகச் சிறப்பானவை. இவை ஆஸ்துமா நோயின் அறிகுறிகளிலிருந்து நோயாளியை முழுமையாக விடுதலை அடையச் செய்யும். ’இன்ஹேலர் பழகிவிடும்… அது இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்படும்’ என்று  அக்கம் பக்கத்தில் சொல்வதைக் கேட்பதைவிட, குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் இன்ஹேலர் உபயோகிப்பது ஆஸ்துமா நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். இருமல் மருந்துகளை கடைகளில் வாங்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சுவாசக்குழாய் நோய்களை காய்ச்சலாக்கி கஞ்சி குடிக்க   வைக்கும். அவை நோய்களை குணமாக்கு வதற்கு பதில் மோசமாக்கி மருத்துவரை நாடும் காலத்தை தாமதமாக்க மட்டுமே பயன்படும்.

இருமல் மருந்துகள் (bromhexine ambroxol carbocisteine acetylcysteine), சளியை வெளியேற்றும்  மருந்துகள் (codeine dextromethorphan), மூளையில் இருமல் மையத்தை இரும விடாமல் தடுக்கும் மருந்துகள் (Chlorpheniramine, Diphenhydramine, promethazine, Phenergan), அலர்ஜியை குறைக்கும் மருந்துகள் ஆகியவை ஓரளவுக்கு குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம், பேதி போன்ற இரைப்பை, உணவுக்குழாய்  பக்கவிளைவுகளையும், தோலில் அரிப்பு, தோலில் மாற்றங்கள் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இவற்றாலும் (அலர்ஜி மருந்துகளை போலவே) தூக்கம் அதிகமாக வரவும், கவனக் குறைவாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வாகனங்கள்  ஓட்டுவோரும், இயந்திரங்களை இயக்குபவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பக்கவிளைவுகளுக்காகவே இருமல் மருந்துகளை போதை வஸ்து போல ஒரே வேளையில் அதிக அளவில் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆஸ்துமாவுக்காகத் தரப்படும் இருமல் மருந்துகளை (Salbutamol, Terbutaline,   Etophylline) சுவாசப்பாதை நுரையீரலில் காற்றுக்குழாய்களை   விரிக்கச் செய்யும் மருந்துகள் (bronchodilator) அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும்… மூளையைப் பாதிக்கும்.  சில கிருமி மருந்துகளின் வேலையைப் பார்க்கும். அதனால், குறிப்பிட்ட அளவு இருமல் மருந்தை மட்டும் அந்த அந்த வேளைக்கு எடுத்துக்கொள்ளவும். ACE Inhibitor  (Enalapril, Ramipril) என்கிற ரத்தக் கொதிப்பு மாத்திரை சிலருக்கு இருமலை வரவழைக்கலாம்.

பராமரிக்கப்படாத தூசி நிறைந்த சாலைகள், புகை வெளியிடும் வாகனங்கள், தொழிற்சாலைகள், குறிப்பாக கட்டிடம் கட்டும் இடங்கள், சுற்றி இருக்கும் அனைவருக்கும் வரவழைக்கும் இருமலை eosinophilic bronchitis என்ற ஆஸ்துமா போன்ற இருமலை வரவழைக்கும். இதுவே வயிற்றுப் புழுக்களாலும் (worms) வரலாம். அதிக நெடியுடைய பெர்ஃப்யூம் இருமலை வரவழைக்கும்.மிகுந்த எண்ணெய் கலந்து வறுக்கப்பட்ட உணவு, இரவில் தூக்கத்தில் நெஞ்சு கரித்தலையும் இருமலையும் தூண்டும் (Gerd). இருமலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் குணமாகும் வரை மருத்துவரை பார்ப்பது அவசியம்.

இருமலை தடுப்பது அவசியம்!

இருமல் மூலம் கிருமிகள் உறவினர், உற்றார், நண்பர்கள் என அருகில் இருப்பவர்களுக்கு 6 அடி தூரத்துக்குப் பரவும். இருமலை முகத்திரை (Mask) அணிவதன் மூலம் அல்லது கைக்குட்டை கொண்டு அல்லது வெறும் கையாலே வாயின் அருகில் வைத்து தடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இருமல் மருந்துகள் இருமல் என்ற நோய் அறிகுறியை மட்டும் அந்த அந்த நேரத்துக்கு குறைக்கும். 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

ஜாக்கிரதை!

ஒரு காச நோயாளி (TB) தன் வாழ்நாளில் தொடர்ந்து இருமினால் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள்,  உறவினர்கள் என 17 பேருக்கு நோயைத் தரமுடியும் என்பது மருத்துவ உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *