சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்

சிறுநீரகம்
இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக்  கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக  இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக்  காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
இருதயத்திலிருந்து பம்ப் செய்யப்பட்ட சுத்த இரத்தமானது உடல் முழுவதும் சென்று அவைகளுக்கு வேண்டிய சக்திதயை அளித்து, அங்குள்ள  வேண்டாத கழிவுகள், தேய்ந்த அழிந்த பொருட்களை எடுத்து வரும் ரத்தம் இந்த வடிகாலான சிறுநீரகத்தை அடைகிறது. அங்கு மிக விரைவாக  வேண்டாத பொருட்களையும், நீரையும் பிரித்துவிட்டு ரத்ததை இருதயத்திற்கு அனுப்புகிறது. கழிவுப் பொருட்களை ஒரு வாய்க்காலின் மூலமாகச்  சிறுநீர் பைக்கு அனுப்புகிறது. சிறுநீர்ப்பை அடி வயிற்றின் கீழப்பாகத்தில் இருக்கிறது. அங்கு கழிவு நீர் சொட்டுச் சொட்டாய் வந்து சேரும்.

சிறுநீர்ப்பை பாதி நிறைந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும். இந்தச் சிறுநீரில் 95 சதவீதம் நீரும், 5 பங்கு பிற கழிவுப்  பொருட்களும் இருக்கும். அதில் பாதி அளவு தசைகளும் எலும்புகளும் அழிவதால் ஏற்படும் கழிவுப் பொருட்களாகிய யூரியாவும் மீதியில் நாம்  உண்ணும் உணவில் உள்ள உப்பு, சல்பேட் போன்றவை இருக்கும்.

பிட்யூட்டரி, தைராய்டு, கல்லீரல், பாங்கிரியான் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நோயோ, பாதிப்போ ஏற்பட்டால் அது மூத்திரக் காயையும்  பாதிக்கும்.

சிறுநீரகக் கல்
சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டதும் சிறுநீர் கழிக்க வேண்டும். அவ்வாறு போகாமல் அடக்கி வைப்பது, கடின நீர், உப்புச்சத்தால்  நீர் குடிப்பது போன்றவற்றால் சிறு மணல் போன்ற உப்புகள் சிறுநீரகத்தில் தோன்றும். அதிகம் சுத்தமான நீர் குடித்தல், யோகாசனம் செய்தல்  போன்றவற்றால் இதனை நீக்கலாம். அவ்வாறு செய்யாது இருந்தால் அந்த மணல் ஒன்று சேர்ந்து உறைந்து கற்களால் மாறும். சிறுநீர் போகும்  வழியை அடைக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும்.

சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்

1. ரோஜாப் பூ ஊறவைத்த தண்ணீரில் முள்ளங்கியின் சாறு விட்டு தினம் நான்கு வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நோய் ஒழியும்.
2. நன்னாரி வேர், கொத்துமல்லி, சிறுநெருஞ்சி தலா 50கி. எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடித்து தினம் மூன்று  வேளை நூறு மில்லி வீதம் சாப்பிட்டு வர நீர் எரிச்சல் தணியும்.
3. கொத்தமல்லியும் புளியங்கொட்டைத் தோலும் வறுத்துப் பொடித்து காபி போன்று கசாயமிட்டுக் குடித்தால் நீர்க்கடுப்பு தீரும்.
4. ஆடுதீண்டாப்பாளை, கருஞ்சீரகம் இவற்றை அளவாக எடுத்து காடி நீர் விட்டரைத்து தொப்பிளின் கீழ் பூச நீரடைப்பு விலகும்.
5. வாழைக்கிழங்கில் ஊறும் நீருடன் நெல்லிக்காய் அளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட மூத்திர அடைப்பு அகலும்.
6. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி தயிரில் கலக்கி தாளிக்க தயிர் பச்சடியாக உண்ண நீர் இறங்கும்.
7. வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி 100 கிராம் வீதம் உட்கொள்ள மூத்திரத் தாரையில் உண்டாகும் கல் கரையும். கருஞ்சீரகத்தைத்  தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கல் கரையும்.
8. பொட்டிலுப்பு 100 கிராம், வெங்காரம் 100 கிராம், சிலாசத்து 100 கிராம் இவை மூன்றையும் நெல்லிக்காய்ச் சாறு, காற்றாழைச்சாறு,  முள்ளங்கிச் சாறு, வாழைத்தண்டுச் சாறு இவை மூன்றையும் முறையே ஒவ்வொரு நாளாக விட்டு அரைத்து வில்லைத் தட்டி புடமிட  வேண்டும். புடம் ஊறிய பிறகு எடுத்துக் கல்வத்தில் இட்டு அரைத்துப் புட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு 20 மில்லி கிராம் மோரில் கலந்து  சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.
9. வெங்காரம் சிலாசத்து, நண்டுக்கல் இவற்றை 20 கிராம் எடுத்து கற்றாழைச் சாறு விட்டு அரைத்து புடமிட்டு எடுத்துக் கல்வத்திலிட்டு  அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சிட்டிகை அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். மூத்திரம் மோர் கலந்தது  போல் வெளியாவது நிற்கும்.
10. முடக்கொத்தான் ஒரு பலம், வெள்ளைப் பூண்டு அரைப்பலம், இரண்டையும் அரைத்து மூன்று நாட்கள் உட்கொள்ள சிறுநீர்க் கட்டு இறங்கும்.
கொண்டிடுக் கொத்தானிடைப்பலம் பூண்டிடும் வெள்ளைப் பூண்டிடு அரைப்பலம் வெண்டிடு மரைத்திவ்வித மூன்று நாள் கண்டுஞ் சிறு  நீர்க்கட்டிறங்குமே & தேரையர்
11. பச்சரிச்சி ஆறு பலம் எடுத்து விராலி இலைத்துளிரைக் கூட்டி கொடுத்திட்டால் சிறுநீரில் இரத்தம் வருவது நிற்கும்.
பாடும் நீரினில் ரத்தம் விழுந்திடில் கூடும் பச்சரிசியின் அறுபலம் சாடும் விராலி இலையின் துளிர் கூட்டி நாடுமூன்று நாள் நயந்து கொடுத்திடே.
12. சுக்கு, இந்துப்பு, கல்மதம் இவற்றை நீர்விட்டு அரைத்துக் குடிக்க வயிறு கழிச்சல் உண்டாகும். நீர்க்கடுப்பு தீரும்.
13. நொச்சி இலை ஒரு பிடியும், முருக்கம் பூ ஒரு பிடியும் சட்டியில் இட்டு வதக்கி விரைவாதம் கட்ட குணமாகும்.
கழற்சி இலை, உழிஞ்சை இலை, பூண்டு, வசம்பு, உப்பு இவைகளைச் சேர்த்து சட்டியைக் காயவைத்து அதிலிட்டு வெதுப்பி சிவந்து வருகிற போது  ஒரு பிழிதுணியில் தட்டி கட்டி வீங்கியிருக்கிற விரையில் அனத்தவும். இப்படி மூன்று தடவை அனத்தி மூன்றாவது தடவை இலை வைத்துக்  கட்டவும். இப்படி மூன்று தடவை வைத்துக் கட்டினால் விரைவீக்கம், வாதம், அண்டசூலை நோய்கள் குணமாகும்.
14. வசம்பு, உள்ளி, வழுதலை, மிளகு, சுக்கு வகைக்கு அரை பலம் இவைகளை அரைத்து வெந்நீரில் 5 நாள் உட்கொள்ள அண்டவாதம்  குணமாகும்.உண்டிடும் வசம்பு உள்ளி விழுதலைக் கொண்டிடு மிளகு சீறுசுக்கொடுக் கண்டிரு வகையொன்றுக் கரைப்பலம்
தொன்றிடு மரைத்தூட்டு வென்னீரிலே.
15. மிளகு ஒரு பலம், பூரம் ஒரு களஞ்சி எடை, லிங்கம் கால் களஞ்சி எடை இவைகளைத் தேன் விட்டு அரைக்க மெழுகாகும். இந்த மெழுகை  தூதுளங்காய் அளவு உருட்டி இரண்டு வேளை வீதம் ஐந்து நாள் உட்கொள்ள விரைவாதம் இடைஞ்சல் நீங்கும். உப்பு, புளி, புகை நீக்க வேண்டும்.
நீங்கு நன்மிளகு வகையோர் பலம் நுங்கு பூரமுமொன்று களஞ்சிடை வாங்கு லிங்கம் வகையது காலதாய் ஆங்கு தேன் விட்டரை மெழுகாகுமே.
17. கழஞ்சி வேர், கழற்சி விதை இரண்டையும் எடுத்து சிறுநீர் விட்டரைத்து கொதிக்க வைத்து பூசிவர விரைவீக்கம் குறையும். புளியின் வடக்கு நோக்கிப் போகும் வேரை எடுத்து வந்து சாராயம் விட்டரைத்து விரையில் பூச வீக்கம் குறையும்.
18. கொழுஞ்சி இலை, வேப்பிலை தளிர் இலைகளை கழற்சி இலை இடித்துப் பிழிந்த சாற்றில் அரைத்துக் கொதிக்கச் செய்து பூசி வரவிரைவீக்கம்  குறையும்.
19. அமுக்கூரம், கழற்சி விதை, காந்தம், எள்ளு விதை, யானை திப்பிலி இவற்றை அளவாக எடுத்து முட்டை வெண் கரு விட்டரைத்துப் பூசி  வந்தால் விரைவீக்கம் குறையும்.
20. முருங்கையின் வடக்கு நோக்கிப் போகும் வேர், சுக்கு இவற்றை எடுத்துச் சாராயம் விட்டரைத்துப் பூச குணமாகும்.
21. வெள்ளை எருக்கலை வேர் தொலி, சர்க்கரை எடுத்து வந்து அரைத்து ஆறு வேளை உட்கொள்ள விரைவாதம் நீங்கும்.
22. யாழ்ப்பாண புகையிலையை வாங்கி துண்டாக்கி விரையில் பூசிவர வீக்கம் குணமாகும்.
23. அத்தி இலை, வில்வ இலை, வேம்பு இலை, ஆடாதொடை இவைகளைச் சமனளவாக எடுத்து நிழலில் காயவைத்து இடித்துச் சூரணம் செய்து  காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகம் நல்ல முறையில் செயல்படுவதுடன் கல்லடைப்பு, நீர்த்தாரைப்புண், நீர்ச்சுருக்கு நோய்கள்  குணமாகும்.
24. படிகாரம் 35 கிராம், கல்மதம் 35 கிராம் எடுத்து முறைப்படி சுத்தி செய்து குழியம்மியிலிட்டு சேர்த்து கற்றாழைச் சாறு விட்டு நன்கு நெகிழ  ஆறு மணி நேரம் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தி அகலில் வைத்து சீலை செய்து 50 எருவில் புடமிட்டெடுக்க உயர்ந்த  பற்பமாகும். இந்த பற்பத்தைத் தேனில் கலந்து கொடுக்க சிறுநீரில் விந்து விழுவது நிற்கும்.
25. வெள்ளரிக்காயானது சிறுநீரக நோய்களை நீக்க வல்லது. சிறுநீர் பிரியாமல் அடி வயிறு ஊதிப்போனால் வெள்ளரிக்காய் விதைகளை  அரைத்து அடிவயிற்றில் பூசினால் சிறிது நேரத்தில் நீர் பாய்ந்து விடும்.
26. சிறு பசலையானது நீர்க்கடுப்பு, நிரடைப்பு, வெள்ளை படுதல், சுபையின்மை, வாந்தி ஆகியவை போக்கும்.
நீர்க்கடுப்பு நீரமைப்பு நீங்காத மேகசம் வார்க்கடுத்து வாராமல் கட்டுங்கொண் & பார்க்கவொண்ணா அற்ப விடைமாதே! அரோசிசர்த்தியைத்  தொலைக்கும் நற்பசலைக் கீரையது நன்று.
27. சிறுபீளையால் பாண்டு, பெரும்பாடு, நீர் எரிச்சல், நீரடைப்பு, கல்லடைப்பு, குடற்சூலை, குருதிச்சூடு முதலியன நீங்கும்.
இதன் இலைச்சாற்றினை குடித்து பர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு போகும். இதன் வேரைச் சேர்த்துக் காய்ச்சிக் குடீத்து வர சூல் கொண்ட  பெண்களுக்கு வலுவேற்றும்.
28. மேகம், வெண்புள்ளி, கல்லடைப்பு, நீர்வேட்கை, எலும்புருக்கி நோய் ஆகியவற்றை யானை நெருஞ்சில் போக்கும்.
மேகத்தைப் போக்கிவிடும் வெண்குட்டந் தானொழிக்குந் தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்காண் & நாகத்தாந் தேனையரும் பாகைத் திருத்துங்  கிளிமொழியே யானை நெருஞ்சிலது.
29. சிறுபீளை மூலிகையின் இலைச்சாற்றால் 50 மி.லி. வீதம் குடித்து வர கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போம். நிரடைப்பு கல்லடைப்பு  நீங்காக் குடற்சூலை போரடரி ரத்தகணம் போக்குங்காண் & வாரிறுக்கும் பூண்முலையே! கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிதுகற்பேதியறி.
கக்குஞ் சிறுபீளைகார் நெருஞ்சி மாவிலங்கை விக்கும் பேராமுட்டி வேருடனே& யொக்கவே கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு காட்டிக் கழன்றோடுங் காண்
30. செங்கீரையினால் சிறுநீர் எரிச்சல், வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக்கடுப்பு முதலியன போம்.தண்டுமெத்த வாய்வு தணியாத சீதளமாம் விண்டுரைக்கில் சின்னோய்போம் விள்ளவோ கொண்டக்கால் நீர்க்கடுப்பு வெட்டையனல் நில்லாது நேரிழையோ போர்க்கடுப்பி ரத்தமும் போம்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *