கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை!…

உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள்.

கருவில் இருக்கும் சிசுவுக்கான ‘ஸ்டெம் செல் தெரபி’
நிஷ்ஷேல் ஓபர் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை எலியானா
‘ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்’ என்று சொல்வார்கள். ஆனால், உயிர்காக்கும் மருத்துவம் என்று வரும்போது எல்லா சமயங்களிலும் உண்மையான நண்பர்களால் கூட நம் உயிரைக் காக்க முடியாது.

உதாரணமாக, திடீரென்று ஏற்படும் விபத்தினால் அதீத ரத்த இழப்பு நேரிடும்போது உடனிருக்கும் நண்பரால் உடனே ரத்தம் கொடுத்து உதவ முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட ரத்த வகையைச் சேர்ந்த ரத்தத்தைத்தான் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்.

அதுபோலத்தான், உடல் பாங்களை தானமாக கொடுத்து உதவ உற்ற நண்பரே முன்வந்தாலும், திசு ஒற்றுமை இல்லாத ஒருவரால் மற்றொருவருக்கு மருத்துவ ரீதியாக உதவ முடியாது.

அதிர்ஷ்டவசமாக, நமக்கு ஆபத்தில் உதவக்கூடிய உற்ற நண்பன் நம் உடலிலேயே உண்டு. அது யாரென்றால், உடலிலுள்ள அனைத்து வகை செல்களையும் உற்பத்தி செய்யும் அசாத்திய திறன்கொண்ட நம்முடைய ஸ்டெம் செல்கள் தான். மருத்துவம் மிகவும் அதிநவீனமாகி விட்ட இந்த காலத்திலும் கூட, ஸ்டெம் செல்களை வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ள இன்னும் பல தடைகள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, ஒரு நோயாளியின் உடலில் பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்களைக் கொண்ட ஒரு கொடையாளரை கண்டறிவதே மிகவும் கடினம். ஆனால் அப்படிக் கண்டறிந்த பின்னரும் ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொள்வது என்பதே மிகவும் ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், ஸ்டெம் செல் சிகிச்சைகள் பலனளிக்க வேண்டுமானால், ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக் கூடிய பல மருந்துகளை தொடர்ந்து நோயாளியின் உடலுக்குள் செலுத்தியாக வேண்டும்.

சில தவிர்க்க முடியாத சூழல்களில், இம்மாதிரியான ஸ்டெம் செல் சிகிச்சை சிக்கல்களுடனேயே, சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சோதனை முறை ஸ்டெம் செல் சிகிச்சைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது, உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெனிஆப் குழந்தைகள் மருத்துவமனையைச் (UCSF Benioff Children’s Hospital) சேர்ந்த டிப்பி மெக்கென்சி தலைமையிலான அமெரிக்க மருத்துவர்கள்.

ஹவாயைச்சேர்ந்த நிஷ்ஷேல் ஓபர் எனும் 6 மாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை நடந்தது. அப்போது அவரது வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஆல்பா தாலாசீமியா மேஜர் (alpha thalassemia major) எனும் ஆபத்தான மரபணு ரத்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் சிசுக்கள் பொதுவாக இறந்து பிறப்பது அல்லது பிறந்த சில நாட்களில் இறந்து விடுவது வழக்கம். ஆனால் இப்போது அந்தக்குழந்தை தற்போது தனது பெற்றோருடன் ஹவாயில் நலமாக இருக்கிறது. அவளுக்கு எலியானா என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.

அதற்குக் காரணம், எலியானா 6 மாத சிசுவாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் சிசு ஸ்டெம் செல் தெரபிதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘ஆல்பா தாலாசீமியா மேஜர்’ என்பது ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள, ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் புரதத்தின் உற்பத்தியை வெகுவாக குறைத்துவிடும் ஒரு மரபணுக் குறைபாடு ஆகும்.

இதன் காரணமாக உடலின் உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டு, ஆபத்தான வீக்கம், மோசமான ரத்த சோகை, உடல் பாக வீக்கம் மற்றும் மேலும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். ஆல்பா தாலாசீமியா மேஜர் நோய்க்கு, கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளப்படும் ‘ப்ளட் ட்ரான்ஸ்பியூஷன்’ எனப்படும் ரத்த மாற்றுதான் பாரம்பரியமாக செய்யப்படும் சிகிச்சையாக இதுவரை இருந்துவந்துள்ளது.

இந்த சிகிச்சை வெற்றிபெற்றால் குழந்தை பிழைக்கும். ஆனால் அதன்பிறகு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக, ‘எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை’ எனப்படும் ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையை குழந்தைப் பருவத்தின் ஒரு காலகட்டத்தில் மேற்கொள்ளலாம்.

இந்த சிகிச்சை மேற்கொள்ள சரியான ஸ்டெம் செல் கொடையாளரை கண்டறிவது முதல், ஆபத்தான சிகிச்சை முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை நோயாளி சந்தித்தாக வேண்டும்.

எலியானாவின் சிகிச்சைக்காக, மருத்துவர்கள் முதலில் ரத்த மாற்று சிகிச்சையை தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த ரத்த மாற்றுகள் ஒன்றில் எலியானாவின் தாய் நிஷ்ஷேல் ஓபரின் எலும்பு மஜ்ஜையில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கலக்கப்பட்டு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டெம் செல் கலந்த ரத்த மாற்று மூலமாக எலியானாவின் உடலுக்குள் செல்லும் தாயின் ஸ்டெம் செல்கள், அவரது எலும்பு மஜ்ஜைக்குள் சென்று ஆரோக்கியமான புதிய ரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும், பின்னர் அவை கருவின் ரத்த சோகை நோயை குணப்படுத்தும் என்பது எங்களுடைய (மருத்துவர்களின்) எதிர்பார்ப்பாக இருந்தது என்கிறார் மருத்துவர் டிப்பி மெக்கென்சி.

இவரின் கூற்றுப்படி, ஆல்பா தாலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் ஸ்டெம் செல் ட்ரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றாலும் கூட, அதனால் பல புதிய சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, ஆபத்தான மருந்துகளை செலுத்த வேண்டியதைக் கூறலாம். மாறாக, கருவாக இருக்கும்போது குழந்தையானது தாயின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்ளும் என்பதால், சிசு ஸ்டெம் செல் சிகிச்சையை மேற்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது என்கிறார் மெக்கென்சி.

ஸ்டெம் செல் சிகிச்சைக்குப்பின் பின்னர், முன்று மாதங்கள் கழித்து பிறந்த எலியானா 5 பவுண்டு எடையுடன் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் பிறந்தார். ஆனால் அவருடைய ஸ்டெம் செல் சிகிச்சை முழுமையாக வெற்றி பெற்றதா இல்லையா என்பது இனிவரும் மாதங்கள் அல்லது வருடங்களில்தான் உறுதி செய்யப்படும்.

ஒருவேளை இந்த முயற்சி வெற்றிபெற்றால், இனி சிசுக்களுக்கும் ஸ்டெம் செல் தெரபியை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் மெக்கென்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *