ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது

உலகத்தின் வெர்ஷன் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நிற்காமல் ஓடிக்கொண்டே வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது! இந்த நிர்ப்பந்தம் ஆண்களுக்குச் சற்றே அதிகம். சத்தான உணவுகளைத் தவிர்ப்பது தொடங்கி, ஓய்வு நேரத்தை ஓரங்கட்டுவது வரை எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல். இந்த நிலையில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன… அவற்றை எப்படிச் சமாளிப்பது .

நார்ச்சத்து புரதச்சத்து எதில் கிடைக்கும்?

ஆண்களிடம் உள்ள டெஸ்டோஸ்டீரான் (Testosterone) ஹார்மோன்தான் அவர்களின் செயல்களைத் தீர்மானிக்கிறது. இந்த ஹார்மோன், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டுதல் மூலம் விதைப்பையில் சுரக்கும்; பாலியல்ரீதியாகவும் மனரீதியாகவும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும்.

இந்த ஹார்மோனைச் சரியான அளவில் வைத்துக்கொள்வதில்தான் ஓர் ஆணின் செயல்பாடு இருக்கும். பொதுவாக, இதமான உணவு உடலையும் மனதையும் செழிப்பாக வைத்திருக்க உதவும். டெஸ்டோஸ்டீரானை சீராக வைத்துக்கொள்ள நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த உணவுகளே போதுமானவை. உளுந்து, பாசிப் பயறு, ஆட்டுக்கால் சூப், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பால் உணவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

 

மதுவும் விஷமும் ஒன்று! 

மைதாவில் தயாரிக்கப்பட்டவை, துரித உணவுகள், தயார் நிலையில் உள்ள உணவுகள், வெறும் வயிற்றில் மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை ஆண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டியவை. இவற்றில் சத்தானது என்று எதுவும் இல்லை. ஆக்சிஜனின் அளவும் மிகவும் குறைவாக இருக்கும்.

குறிப்பாக, புகையிலை உடலில் சேர்ந்தால் உடல் கால்சியத்தை எடுத்துக்கொள்வது குறையும். புகையிலை, எலும்பின் அடர்த்தியைத் தேய்வடையச் செய்யும். இந்தக் காரணத்தால் காலப்போக்கில் நிற்கக்கூட முடியாத நிலைக்கு ஆண்கள் தள்ளப்படுவார்கள். நிகோட்டின் ரத்த நாளங்களில் பதியும். இதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வெரிக்கோஸ் நோய் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேதத்தை பொறுத்தவரை, `மதுவும் விஷமும் ஒன்று’ என்ற ஒரு கோட்பாடே இருக்கிறது. மது அருந்தினால், நினைவற்ற நிலை ஏற்படும், விஷம் குடித்தால், மரணம் ஏற்படும். இது மட்டும்தான் மதுவுக்கும் விஷத்துக்கும் உள்ள வேறுபாடு.

உளுந்து நல்லது!

ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்பட முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரைநோயைத் தவிர்க்க, உடலில் சரியான அளவில் சர்க்கரையை வைத்திருக்க பாசிப் பயறு, நெய், கடலை ஆகியவற்றை உண்ணலாம். பாசிப் பயறை 2 – 3 மணி நேரம் ஊறவைத்து பிறகு, வேகவைத்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் நெய்யை சேர்க்கக் கூடாது என்ற கருத்து பலரிடம் உள்ளது. அதேபோல், சிலருக்கு உளுந்தை மட்டும் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். பொதுவாக, உளுந்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே, பருமனாக உள்ளவர்கள் உளுந்தைத் தவிர்க்க வேண்டும். மெலிந்தவர்கள் உளுந்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.

 

நட்ஸுக்கு வெல்கம்!

கபம், பித்தம், வாதம் என மூன்று தோஷங்களைக் குறிப்பிடுகிறது ஆயுர்வேதம். கபம், உடல் அமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும். இது குழந்தைப் பருவத்தில் அதிகமாக இருக்கும். பித்தம், பால்ய பருவத்தில் உண்டான வளர்சிதை மாற்றம், செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்தும். வாதம், வயதான காலத்தில் அதிகமாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் பால், மோர், நெய், தயிர், உளுந்து ஆகியவை சாப்பிடவேண்டியவை. இதனால், புரதச்சத்தும் பாலியல் தொடர்பான ஹார்மோன்களும் உடலில் செழிப்பாக இருக்கும். பழங்கள், பாதாம், முந்திரி போன்றவை உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தினமும், சாப்பிட்டு முடித்ததும் ஒரு வேளைக்கு 2 பேரீச்சைகள் வீதம் சாப்பிட்டால் இரும்புச்சத்து அதிகரிக்கும்; டெஸ்டோஸ்டீரான் அளவு மேம்படும். வாலிபப் பருவத்தில் ஆண்கள், ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். இது புரதத்தை அதிகரிக்கும். மாமிசம் உண்ணாதவர்கள் ஆட்டு இறைச்சிக்குப் பதிலாக பாசிப் பயறு எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் நெய், உளுந்து சேர்த்து உருண்டை பிடித்து தினமும் உண்டு வந்தால், டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கும். வாலிப வயதில் இரவில் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி விருத்தியாகி, பாலியல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

 

மலச்சிக்கல் தவிர்க்க… சிறுநீர்க் கோளாறைச் சீராக்க..!

வயதான காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதற்கு, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உண்ணலாம். ஆண்களுக்குப் பெண்களைவிட நியூரான்களின் பாதிப்பு வயதான காலத்தில் அதிகமாக இருக்கும். இது அல்சைமர் நோய்க்கும் உடல் நடுக்கத்துக்கும் வழிவகுக்க வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்க, நெய், வெண் பூசணி ஆகியவற்றை சாப்பிட்டு வரலாம். வயதான காலத்தில் பெரும் தொந்தரவாக ஆண்களுக்கு அமைவது, மலச்சிக்கல். மலச்சிக்கலால் பல துணை நோய்களும் கூடவே படையெடுக்கும் வாய்ப்பும் உள்ளது. பூசணியுடன் இரு மடங்கு நெய்யும் ஒரு மடங்கு தேனும் கலந்து சாப்பிட்டுவந்தால், மலம் வறண்டு போகாமல் தவிர்க்கலாம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் தண்ணீரும் மலமிளக்கியாகச் செயல்படுபவை.

பெண்களுக்கு கர்ப்பப்பை எப்படி முக்கியமோ அதேபோல், ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் சுரப்பி (Prostate gland) இன்றியமையாதது. இது, ஆண்களின் முதுமைக் காலத்தில் வீக்கம் அடைந்து பிரச்னையை ஏற்படுத்தும். வயதான காலத்தில் உடலுறவுகொள்ளாமல் இருப்பதால், சுரப்பியின் செயல்பாடு இருக்காது. எனவே, ப்ராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர்க் குழாய் சுருங்கும் நிலை உருவாகும். மேலும், மலச்சிக்கல் ஏற்பட்டாலும் பெருங்குடலுக்கு அழுத்தம் ஏற்பட்டு சிறுநீர்க் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் தேங்கினால், தொற்றுநோய் வரும். நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் இதனைத் தவிர்க்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கலை குணப்படுத்தும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் சிறுநீர் பிரச்னையைத் தவிர்க்கும்.

இரவு நேரப்பணிகளில் இருக்கும் ஆண்கள் கவனிக்க!

இரவு நேரங்களில் வாத தோஷம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, உடலில் வெப்பம் அதிகரிக்கும். வாதத்தைச் சமப்படுத்த லஸ்ஸி, பொங்கல், பாசிப் பயறு பாயசம், மாதுளம் பழம் கலந்த தயிர் சாதம், தண்ணீர் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு இரவுப் பணிக்கு சென்றால் உடல் வெப்பமாகாமல் இருக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு…

பொதுவாக, விளையாட்டு வீரர்களுக்கு புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தேவை. நாட்டுக்கோழி, வேகவைத்த முட்டை ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது. பால் உணவுகள் கால்சியத்தை அதிகரிக்கும். பிரண்டை, கொள்ளு, எள் ஆகியவை தசை சம்பந்தமான கோளாறுகளுக்குத் தீர்வாக அமையும். நாட்டுக்கோழி, விளையாட்டு வீரர்களுக்கு நல்ல ஆற்றலையும் உடலுக்கு வலிமையும் கொடுக்கும்.

குழந்தையின்மை பிரச்னை தீர்க்கும் உணவுகள்!

பொதுவாக, குழந்தையின்மைக்கு 70 சதவிகிதக் காரணம், மனரீதியானதாகத்தான் இருக்கும். 30 சதவிகிதம் மட்டுமே சத்துக் குறைபாடு, மரபணுக் காரணம் என இருக்கும். இதை உணவுகள் மூலமாகவே தவிர்த்துவிடலாம். நாட்டுக்கோழி, முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து குழந்தைப்பேற்றுக்கு வழிவகுக்கும். விதைகள் அதிகமாக இருக்கும் பழங்களை (அத்தி, மாதுளம்) சாப்பிட்டுவந்தால், ஆண்களின் விதைப்பை வலுப்பெற்று விந்தணுக்கள் சிறப்பாகச் செயல்படும். நெருஞ்சி முள்ளைப் பொடிசெய்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், விந்தணுவின் அமைப்பு, செயல்பாடு, வீரியம் ஆகியவற்றில் பிரச்னைகள் ஏற்படாது. ஆயுர்வேதத்தின் அஸ்வகந்தா மருந்து, பாலியல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண்களுக்கு உதவிசெய்யும்.

பொதுவான சில டிப்ஸ்…

* தூக்கம் தொடர்பான மற்றும் குழந்தையின்மை தொடர்பான மருந்துகளை இரவில் சாப்பிடுவதற்கு முன்னர் எடுத்துக்கொண்டு மூன்று மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும்.

* மலச்சிக்கலுக்கான மருந்தை தினமும் இரவு உணவுக்குப் பின்னர் அரை மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ளவும்.

* வாழைப்பழத்தை இரவு உணவுக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.

* தண்ணீரை அதிகமாகவும் குடிக்கக் கூடாது. குறைவாகவும் குடிக்கக்கூடாது. மிதமான அளவில் குடிப்பது சிறந்தது. இந்த ஆயுர்வேத அறிவுரையை ஆண்கள் மனதில்கொள்ளவும். வாழ்க்கை நலமாகும்!

Originally posted 2017-12-02 13:43:14. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *