சிறுநீரகத்தின் பணிகள்

சிறுநீரகத்தின் பணிகள் என்னென்ன?
உடலின் துப்புரவுத் தொழிற்சாலை சிறுநீரகம்; ரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் பணியைச் செய்கிறது.
சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்னை என்ன?

அளவுக்கு அதிகமாக இருக்கும் கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் போன்றவை, சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியது அவசியம். ஏதாவது
காரணத்தால் வெளியேறாமல், சிறுநீரகத்திலோ சிறுநீரகப் பாதையிலோ தொடர்ந்து தேங்கும் போது, அந்தப் படிமங்கள் கற்களாக உருவாகின்றன.

சிறுநீரக கற்களில் வகைகள் இருக்கிறதா?
கால்சிய கற்கள், யூரிக் அமிலக் கற்கள் உட்பட, சில வகைகள் உள்ளன. கற்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடலாம்.
இவை ஏற்படக் காரணம்?
போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை; உடலில் கால்சியம் அளவுக்கு அதிகமாக இருப்பது; கால்சியம் அதிகமாவதைக் கட்டுப்படுத்தும் பாரா தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது; உடல் பருமன், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குவது என, பல காரணங்கள் உண்டு.
பரிசோதனைகள் என்னென்ன?
ரத்தப் பரிசோதனையில், வழக்கத்தை விட வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும். அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம், 90 சதவீதம் கற்களை அறியலாம். துல்லியமாக அறிய, சி.டி., ஸ்கேன் செய்யலாம்.
என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
1.5 செ.மீ.,க்கு கீழ் உள்ள கற்களுக்கு, லித்தோட்ரிப்சி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. பெர்குயுட் டேனியஸ் நெப்ரோலித்தோடோமி
சிகிச்சை என்பது என்ன?
முதுகுப் பக்கம், ஒரு செ.மீ., அளவுக்கு சிறு துளை போட்டு, அதன் வழியாக ஒரு குழாயை விட்டு, டெலஸ்கோப் வழியாக பார்த்து, கற்கள் உடைத்து எடுக்கப்படும் சிகிச்சை.
லேசர் முறையில் எவ்வாறு கற்கள் அகற்றப்படுகின்றன?
பிறப்புறுப்பு வழியாக குழாயை செலுத்தி, டெலஸ்கோப் உதவியுடன், லேசர் மூலம் கற்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன. இதே போல், ஒரு சிகிச்சை முறைதான், ‘பிௌக்சிபிள் யூரிடெரோஸ்கோப்பி’ இக்கருவி சிறுநீரகம் வரை செல்வதால், கற்கள் எளிதாக அகற்றப்படும்.

இப்பாதிப்பு மீண்டும் வருவதற்கு வாய்ப்புண்டா?
ஒருமுறை இப்பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். பாதிப்பு தீவிரமானால், யூரிக் அமிலம் அதிகரித்து, நோய்கள் வரலாம். சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.
வராமல் தடுக்க என்ன செய்வது?
மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். போதுமான உடலுழைப்பு தேவை. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும், சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
கே.மகேந்திரன்
சிறுநீரகவியல் நிபுணர்,சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *