கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலா?

கர்ப்பத்தின் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். உணவு ஜீரணமாவதும் கொஞ்சம் தாமதமாகும். அதனால் சிலருக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படும். அது ஏன்? அதை எப்படித் தவிர்ப்பது? விடையளிக்கிறார் மகபேபறு மருத்துவர் ரம்யா கபிலன்…

”கர்ப்ப கால ஹார்மோன்களின் காரணமாக உணவு ஜீரணமாவது தாமதமாக நடைபெறும். சாதாரணமானவர்களுக்கு உணவு ஜீரணிக்க 4 மணி நேரம் ஆகிறதென்றால், கர்ப்பிணிகளுக்கு 6 மணி நேரம் கூட ஆகும். அதனால் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும். முறையான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தால் இந்தப் பிரச்னை இல்லாமல் கடந்துவிடலாம்.

சரியான நேரத்தில் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை 3 வேளையாக சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது ஜீரணத்துக்கு உதவும். அதாவது, காலை 8:30 மணிக்கு காலை உணவு எடுத்துக்கொண்டால், 10:30 மணிக்கு சூப், சாலட் அல்லது சாண்ட்விச் சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடலாம். 7:30 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு காலார ஒரு நடை நடந்துவிட்டு, 9 மணிக்கு பாலோ, பழமோ சாப்பிட்டு, 10 மணிக்கு தூங்கச் சென்றால் நெஞ்செரிச்சல் இருக்காது.

ஜீரணமாக தாமதமாகும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற வேக வைத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும். வெளி உணவுகள் அதாவது, ஹோட்டல் உணவுகள் வேண்டாம். அதில் போடப்படும் சோடா, மோனோசோடியம் க்ளூட்டமேட், செயற்கை நிறங்கள் என எதோ ஒன்று அஜீரணத்தை ஏற்படுத்திவிடலாம். சுகாதாரமற்ற உணவுகளால் இன்ஃபெக்ஷன் ஆகலாம்.

காரமான உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளும் வேண்டாம். அசைவ உணவுகளையும் குறைப்பது ஜீரண கோளாறுகளை தவிர்க்க உதவும். சிட்ரிக் அமிலம் நிறைந்த தக்காளி சூப் போன்ற உணவுகளையும் குறைத்துக்கொள்வது நெஞ்செரிச்சலைத் தவிர்க்கும். பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். சர்க்கரையை குறைவாகப் போட்டு பழச்சாறுகள் சாப்பிடலாம்.

வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது ஜீரணத்துக்கு உதவும். மசக்கையின் போது வாந்திப் பிரச்னை அதிகமாக இருந்தால், அது நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும். வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு வாந்தி அதிகமாக இருக்கும். அதனால் வாந்தி அதிகமாக வந்தால் டாக்டரை பார்த்து அதற்கான மருந்துகள் எடுப்பது நல்லது.

திட்டமிட்ட டயட் மட்டுமே நெஞ்செரிச்சலுக்கான கை மருத்துவம். இவ்வளவு பக்குவமாக சாப்பிட்ட பின்னரும் இந்தத் தொல்லை இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *