பெண்ணாக இருப்பதன் ஆனந்தங்களும் அவஸ்தைகளும்

மங்கையராகப் பிறக்கவே நல்ல மாதவம் செய்திடல் வேணுமம்மா’ என்றார் பாரதி. பிறப்பு முதல் இறப்பு வரை பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும், சத்தமாகப் பேசக் கூடாது. பொம்பளைச் சிரிச்சா போச்சு, குனிஞ்சத் தலை நிமிரக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இவை அனைத்தையும் தாண்டி, பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகின்றனர். பெண்ணாகப் பிறந்ததால் இருக்கும் அவஸ்தைகளும் ஆனந்தங்களும் பற்றி சொல்கிறார், பெண்ணியவாதி கீதா இளங்கோவன்.

அவஸ்தைகள்:

* ‘பொம்பளைப் பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அடுத்த வீட்டுக்குப் போகிற பொண்ணு’ எனப் பெண் குழந்தைகளை, சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்ப்பார்கள். அது மனதுக்குள்ளேயே இருப்பதால், பெண்ணாகப் பிறந்ததை ஒரு குற்ற உணர்வாக நினைத்துக்கொள்கிறோம். இதனால், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஆண் குழந்தைகளைப் போல ஓடி, ஆடி விளையாட முடியாது.

* எங்கு போனாலும் துணையோடுதான் போக வேண்டும் என்பார்கள். திருமணமான அக்காவுக்குத் துணையாக குட்டி தம்பியை அனுப்பும் பழக்கத்தை இன்றும் நடைமுறையில் பார்க்கலாம். தனியாக, எளிதாக எங்கும் சென்றுவர இயலவில்லை.

* விரும்பும் ஆடைகளை அணிய முடிவதில்லை. சுடிதார் போட்டால் துப்பட்டா போட வேண்டும். அப்போதுதான் அவள் நல்ல பெண். இந்த மாதிரி ஏகப்பட்டக் கட்டுப்பாடுகள்.

* உடம்பு சரியில்லை என்றால், வீட்டில்கூட விரும்பும் நேரத்தில் படுத்துத் தூங்க இயலாது.

* சமூகம் பெண்களை எப்போதும் ஒரு கண்காணிப்பிலேயே வைத்துள்ளது. எத்தனை மணிக்கு வீட்டுக்குச் செல்கிறோம்? எவ்வளவு நேரம் வெளியில் இருக்கிறோம் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டு அளவிடப்படுகிறது.

* தனித்து வாழும் பெண்ணாக இருந்தால் இன்னும் அதிகளவில் கண்காணிக்கப்படுகிறார்கள். யாரோடு பேசுகிறார், யாரோடு வண்டியில் வருகிறார் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவரது ஒழுக்கம் வரையறுக்கப்படுகிறது.

* எப்போது வேண்டுமானாலும் எந்தப் பெண்ணுக்கும் பாலியல் கொடுமைகள் நடக்கலாம் என்கிற சூழல். வீட்டில் இருந்தாலும், வெளியில் சென்றாலும் ஓர் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

பெண்

ஆனந்தங்கள்:

* பெண்ணாக இருப்பதால் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு சூழலிலும் பல சவால்களை எதிர்கொண்டு வந்திருப்பதால், எந்த ஒரு காரியத்தையும் சரியாக யோசித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாகப் பேசி புரியவைக்க முடிகிறது.

* காலங்காலமாக ஒடுக்கப்பட்டு முன்னேறி வந்துள்ளதால், மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

* உரிமையையும் சுதந்திரத்தையும் பேலன்ஸ் செய்ய முடிகிறது.

* வீட்டில் அனைத்து வேலைகளையும் கட்டுக்கோப்பாக செய்யும் பெண்களால், அலுவலகப் பணிகளையும் கட்டுக்கோப்போடு செய்யமுடிகிறது.

* யாருடன் பேசினாலும் எந்த அளவில் பேச வேண்டும், எவ்வளவு எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்பது இயல்பிலேயே உருவாகிறது.

* தனியாகப் பயணப்படும்போது, தற்சார்போடு இருக்கப் பெண் என்ற மனபலம் மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்துள்ளது.

* எனக்கு எல்லா வீட்டு வேலைகளும் தெரியும். அதனால், மற்றவர்களுக்கு வேலைச் சொல்லிக்கொடுத்து செய்யவைப்பது எளிதாகிறது.

* பெண் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியைத் தாண்டி வேறு வேலை செய்யும்போது கவனிக்கப்படுகிறாள். நம் மீதான ஆரோக்கியமான விமர்சனம் உந்துசக்தியாக முன்னிலைக்குக் கொண்டுசெல்கிறது.

Originally posted 2017-03-30 04:27:49. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *