குழந்தைகளின் பால் பற்கள் பராமரிப்பு

குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம்.

குழந்தைகளின் பால் பற்கள் பராமரிப்பு
பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை.

பற்கள் முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக்கொள்ளும். ஆகவே, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத் தருணத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், வலி போன்றவையும் ஏற்படலாம். இது பொதுவான பிரச்னைதான் என்றாலும், பல் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க, அனுமதிக்கக் கூடாது. இதனால், பாக்டீரியா பரவி பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை நர்சிங் பாட்டில் கேரிஸ் (Nursing bottle caries) என்பார்கள். எனவே, பால் குடித்ததும், வாயைச் சுத்தம்செய்வது அவசியம். பாலுக்குப் பிறகு, தண்ணீர் கொடுத்தோ அல்லது ஈரப் பஞ்சினால் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால், பற்சிதைவு தடுக்கப்படும்.

கூடுமானவரை குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளைக் குறைந்த அளவே கொடுப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, அவர்களின் உடல் நலத்துக்கும் பற்களின் பாதுகாப்புக்கும் நல்லது.

பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தரப் பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth Bud) உள்ளது. பல் மொட்டு வளர வளர, பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பற்கள் விழுந்துவிடும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் வளரத் தொடங்கும். நிரந்தரப் பற்களின் சரியான வளர்ச்சிக்கு, குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக அவசியம்.

Originally posted 2017-01-26 12:21:07. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *