மெல்லிய சேலைகள் மற்றும் சுடிதாரில் செய்யப்படும் டின்செல் எம்ப்ராய்டரி

டின்செய் இழையுடன், கண்ணாடி வண்ண மணிகள் மற்றும் குந்தன் மணிகளும் வைத்து புதுவிதமான எம்ப்ராய்டரி வகைகளும் இன்றைய டிசைனர் சேலைகளில் செய்யப்படுகிறது.

மெல்லிய சேலைகள் மற்றும் சுடிதாரில் செய்யப்படும் டின்செல் எம்ப்ராய்டரி
இன்றைய பேஷனாக இருப்பது நெட்டட், குன்னி, மஸ்லின் போன்ற துணிகளில் வரும் சேலைகள் மற்றும் சுடிதார்கள். மெலிதாகவும், கஞ்சி போடும் அவசியம் இன்றி லேசான விரைப்புடனும் இருக்கும் நெட்டட், ஆர்கன்சா, சில்க் காட்டன் போன்ற துணிகளில் பிரத்யேகமாக போடப்படும் டின்செல் எம்ப்ராய்டரி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

டின்செல் என்பது ஜிகினா என்பதை குறிக்கும். துக்கிய எம்ப்ராய்டரி முறையை ஜிகினா நூல் கொண்டு செய்வதே டின்செல் எம்ப்ராய்டரி ஆகும். இதை மெல்லிய டிசைனர் புடவை மற்றும் சல்வார் கமீசில் செய்யும்போது மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் பண்டிகைகளுக்கு உடுத்திக் கொள்ள வசதியாகவும் இருக்கிறது.

தங்க நிறம், வெள்ளி நிறம் மற்றும் செப்பு நிறத்தினால் ஆன இந்த டின்செல் நூல்களைக் கொண்டு பரவலாக செய்யப்படும் வேலைப்பாடு டின்செய் எம்ப்ராய்டரி எனப்படுகிறது.

டின்செய் இழையுடன், கண்ணாடி வண்ண மணிகள் மற்றும் குந்தன் மணிகளும் வைத்து புதுவிதமான எம்ப்ராய்டரி வகைகளும் இன்றைய டிசைனர் சேலைகளில் செய்யப்படுகிறது. மிகவும் ஜொலிப்பாக இந்த வேலைப்பாடு இருக்கும் என்பதால் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் அணியும் ஆடைகளுக்கு இந்த எம்ப்ராய்டரி பொருத்தமாக இருக்கும். மற்றபடி பரவலாகவும், ஆங்காங்கு சிறு சிறு பூக்களாக இந்த வேலைப்பாடு அமைந்திருந்தால் வயதான பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

வட இந்திய உடைகளை மிகவும் விரும்பி நம் பெண்கள் அணிவதால் அந்த உடைகளுக்கு இந்த டின்செல் எம்ப்ராய்டரி மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மொகலாய ஆடை, ஆபரணங்கள் மிகவும் ஆடம்பரமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். நம்முடைய திருமண வரவேற்புகளிலும், பண்டிகை காலங்களிலும் இம்மாதிரி வித்தியாசமான, ஆடம்பரமான ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.

அந்த மாதிரியான மொகலாய டிசைன் கொண்ட ஆடைகளுக்கு இந்த டின்செல் அல்லது ஜிகினா வேலைப்பாடு மிகவும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது. இந்த டின்செல்லை மெல்லிய தகடாக வாங்கியும், ஆடைகளின் மேல் வைத்து தைத்துக் கொள்ளலாம். ஒரு ஆடை முழுவதுமே டின்செல் எம்ப்ராய்டரியால் வேலைப்பாடு செய்யப்பட்டும் வருகிறது. மிகவும் ஜொலிப்பாகவும், எடுப்பாகவும் இந்த வகை ஆடைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Originally posted 2016-10-19 12:05:14. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *