கர்ப்பிணியின் முதல் மூன்று மாதங்கள்!

இயற்கை பெண்களுக்கு அளித்த இனிய வரம் – தாய்மை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதே அரிதான இன்றைய சூழலில், வஞ்சனையில்லாமல் அது வாரி வழங்கிய தாய்மை வரமும் கிட்டத்தட்ட கிடைக்காமலே போய்க்கொண்டிருக்கிறது. அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்த பெண்கள், இன்று கருவாக்க மருத்துவமனைகளிலும், போலிச் சாமியார்களின் ஆசிரமங்களிலும் கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள்.

அரச மரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது கட்டுக்கதையெல்லாம் இல்லை. அரச மரத்தின் இலையையும் கொழுந்தையும் எலுமிச்சை அளவு சாப்பிட்டு வந்தால், கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகி, சுலபத்தில் கரு உண்டாகும் என்பது நிரூபணமான உண்மை! ஒரே ஒரு குழந்தைக்காக வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிற தம்பதிகள் ஏராளம்… மழலைச்செல்வம் அத்தனை மகத்தானது! வாழ்க்கையில் வேறு எந்த சொத்து, சுகத்தாலும் அடைய முடியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்கள் மழலைகள் மூலம் மட்டுமே சாத்தியம்.

இப்படியெல்லாம் பிரம்ம பிரயத்தனம் செய்து, பெறுகிற குழந்தை வரம் அத்தனை சாதாரணமானதா என்ன? அதைத் தக்க வைத்து, அழகான, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அந்த 9 மாதப் போராட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கிய தருணம். 9 மாதங்களும் உடலை மட்டுமின்றி, மனதையும் ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் முறைகளையும் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

முதல் மூன்று மாதங்கள்…

கர்ப்பிணிகளின் வாழ்க்கையில் முதல் 3 மாதங்களும் மிக முக்கியமானவை. இந்தக் காலத்தில் காலையில் மசக்கையும், சோர்வை ஏற்படுத்தும் சோகையும் அதிகமாக இருக்கும். இந்த அறிகுறிகள் இயல்பானவை என்றாலும் அலட்சியப்படுத்தக்கூடாது.
மசக்கையில் வாயில் நீர் ஊறுவது, ஓக்காளம், மயக்கம், வாந்தி, உணவில் வெறுப்பு, நெஞ்செரிச்சல், சாம்பல், மண் போன்ற பொருள்களின் மீது விருப்பம் போன்றவை தோன்றும்.

சோகை என்பது ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவில் குறைவு ஏற்படுவது. இதுதான் தாய், சிசு இருவரின் அனைத்து உறுப்புகளுக்கும் பிராணவாயுவை எடுத்துச் செல்கின்ற பிரதான பணியைச் செய்கிறது. குறைவு உண்டாகும் போது, சோர்வு, எந்த வேலையையும் சரிவரச் செய்ய இயலாமை, தலைவலி முதலியவை வரலாம். சித்த மருத்துவத்தில், ஒவ்வொரு மாதமும் தோன்றும் குறிகுணங்கள், அவற்றுக்கான தீர்வு முறைகள் தனித்தனியே கூறப்பட்டுள்ளன. அதன் படி…

கர்ப்பிணிகளுக்கு முதல் மாதத்தில் ஏற்படுகிற சிறு வலிகளுக்கு, தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சம் வேர் மூன்றையும் சம அளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து, பசும்பால் கலந்து கொடுத்தால் சரியாகும்.

அதே வலி இரண்டாம் மாதம் வந்தால் தக்கோலமும் தாமரைப்பூவும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்து, பாலில் கலந்து கொடுக்கலாம்.
மூன்றாம் மாதம் என்றால் வெண்தாமரை மலரும், செங்கழுநீர் கிழங்கும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்து, பாலில் கலந்து கொடுக்கலாம்.
மேலே சொன்ன எல்லா பொருள்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மசக்கையின் காரணமாக உண்டாகிற வாந்தி, குமட்டல், தாகத்துக்கு இன்றைய நவீன யுகத்துப் பெண்கள் நாடுவது செயற்கை குளிர் பானங்கள். வாய்க்கு விறுவிறுவென ருசி கொடுத்தாலும், அத்தகைய செயற்கை பானங்களில் சேர்க்கப்படுகிற செயற்கை சர்க்கரை, கல்லீரலில் கொழுப்பாக மாறும். அடிக்கடி, அதிகம் குடித்தால் வயிறு புண்ணாகும். வாந்தி அதிகமாகும். பசி கெட்டுப் போய், உடல் மெலியும். கர்ப்ப கால மஞ்சள் காமாலை வரலாம். கணையமும் சேர்ந்து பாதிக்கப்பட்டு, நீரிழிவும் வரலாம்… ஜாக்கிரதை! எனவே இது போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கை பழச்சாறுகளை சாப்பிடுவதே ஆரோக்கியமானது. இயற்கை பழச்சாறுகளில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ சர்க்கரையானது, பழங்களில் உள்ள நார்ச்சத்தின் உதவியால், சுலபமாக ரத்தத்தில் கலக்கும். மசக்சையைப் போக்கும் மாதுளை, வெல்லம், எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, நாரத்தை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

இரும்புச்சத்து குறைந்தால், பசி இருக்காது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம், மாதுளை, கேழ்வரகு, பெருநெல்லி, தக்காளி, எலுமிச்சை, முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். நறுக்கும்போது கைகளில் கறையை உண்டாக்கும் கத்தரிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, கருணைக்கிழங்கு போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளதாகக் கருதப்படுவதால், அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கர்ப்பம் தரித்த பெண்ணின் நாக்கு, கண்டதையும் கேட்கும். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற கதைதான். தெருவோர பானிபூரியில் தொடங்கி, தள்ளுவண்டிக் கடை சிற்றுண்டி வாசம் வரை கண்டதையும் ருசிக்கத் தோன்றும். ஆரோக்கியமான உணவென்றால் ஆட்சேபமில்லை. ஜங்க் உணவுகள் வேண்டாம். பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், துரித உணவுகளைத் தவிர்க்கவும். அவற்றில் சேர்க்கப்படுகிற செயற்கை உப்பு, ரத்தத்தைக் கேடு அடையச் செய்து, தாய், சேய் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அதிக சுமை தூக்குவது, தீவிரமான உடற் பயிற்சி, அதிர அதிர நடப்பது, துக்கம், அச்சம் தரும் காட்சிகளைப் பார்ப்பது, எளிதில் செரிக்காத உணவுகளை சாப்பிடுவது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஊட்டம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். மகிழ்ச்சியான மனநிலையில் இருங்கள். அழகான காட்சிகளைப் பாருங்கள். சிறந்த புத்தகங்களைப் படியுங்கள். நல்ல இசை கேளுங்கள். உயரம் இல்லாத, காற்றோட்டமான தோல் காலணிகளை அணிந்து, மெல்ல நடை பழகுங்கள். உங்களுக்குள் வளரும் அழகுக் குட்டிச் செல்லத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!

Originally posted 2016-10-10 13:12:10. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *