சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?

உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?
நாம் செய்யும் எல்லா வேலைகளும், நமது உடலின் தசைநார்கள் இயங்குவதால் நடக்கின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சத்து செலவாகிறது. இந்த குளுக்கோஸ் நாம் சாப்பிடும் அரிசிச்சோறு, கோதுமை, கிழங்குகள், பழங்கள், இனிப்பு பொருட்கள் போன்ற மாவுச் சத்துப் பொருட்களில் இருந்து நமக்கு கிடைக்கின்றன. இந்த மாவுச் சத்தை செரிமானத்தின் மூலம் குளுக்கோசாக மாற்றி குடல் உறிஞ்சிக் கொள்கிறது. அது சிறுகுடலில் இருந்து ரத்தத்தின் மூலம் ஈரலுக்குச் செல்கிறது. ஈரல் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் குளுக்கோஸை பகிர்ந்து கொடுக்கிறது.

ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலின் திசுக்களுக்கு செல்கிறது. இந்த திசுக்களை வேலை பார்க்க வைப்பதற்காக ‘இன்சுலின்’ என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் கணையத்தின் சில குறிப்பிட்ட திசுக்களிலிருந்து ஊற்றாய் பெருகி ரத்தத்தில் கலந்து கொள்ளும். உடலில் உள்ள திசுக்களுக்கு எவ்வளவு குளுக்கோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கே இன்சுலின் சுரக்கிறது. அந்த இன்சுலின் எல்லா திசுக்களுக்கும் சரிவிகிதத்தில் அனுப்பப்படுகிறது.

ஏதாவது ஒரு காரணத்தால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் திசுக்களை சென்றடையாமல், ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. திசுக்களுக்கு குளுக்கோஸ் செல்லவில்லை என்றால் உணவில்லாத மனிதன் போல திசுக்கள் அசதியுடனும், சக்தியற்றும் இயங்கும். இதனால் திசுக்கள் அனைத்தும் மிக விரைவிலே முதுமை அடைகின்றன.

ரத்தத்தில் தொடர்ந்து தேங்கிக்கொண்டே வரும் குளுக்கோஸ் ரத்தத்தை அடர்த்தி மிக்கதாக கெட்டியாக மாற்றிவிடுகிறது. அதனால், மெல்லிய சிறு சிறு ரத்தக் குழாய்களில் ரத்தம் புகமுடியாமல் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டமே தடைபடுகிறது. இந்த தடை மூளையில் ஏற்பட்டால், அது பக்கவாதத்தில் கொண்டு போய் விடுகிறது.

இதயத்தில் நடந்தால் மாரடைப்பாக மாறுகிறது. சிறுநீரகங்களில் நடந்தால் சிறுநீரக செயலிழப்பாக தோன்றுகிறது. இதே பாதிப்பு கண்களில் ஏற்பட்டால் பார்வை பாதிக்கப்படுகிறது. கால் விரல்களில் இந்த பாதிப்பு ஏற்படும்போது, ரத்த ஓட்டம் செல்லாத பகுதிகள் அழுகத் தொடங்குகின்றன. அதனால் அந்தப் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வரும்.

குளுக்கோஸ் சத்து திசுக்களுக்கு செல்லாததால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் புண்கள் ஆறுவதும் தடைபடுகிறது. இதுதான் சர்க்கரை நோயின் முழுப்பரிமாணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால் ரத்தத்தின் பளபளப்புத் தன்மை மாறத்தொடங்குகிறது.

உணவு உட்கொள்வதற்கு முன் ரத்தத்தில் 60 லிருந்து 100 மில்லி கிராம் சர்க்கரை இருப்பது இயல்பானது. உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது. அவ்வாறு உச்சநிலையில் 120 முதல் 150 வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இத்தனை மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதால்தான் உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

அதாவது சர்க்கரை நோய்க்கு தீர்வு, சரிவிகித சத்துணவு, போதிய உடல் உழைப்பு, மருந்து-மாத்திரைகள் இவை மூன்றும் தான். சர்க்கரை நோய் வந்து விட்டால் அளவுக்கு மீறி சாப்பிடுவதும் தவறு. பட்டினி கிடப்பதும் தவறு. அதாவது, விருந்தும் கூடாது; விரதமும் ஆகாது.

காய்கனிகளும், நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகளும் உட்கொள்வது சிறந்தது.

Originally posted 2016-06-25 03:49:48. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *