அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?

டுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள்.

அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும்.

கொப்புளங்கள் ஏற்படலாம். அமிலம் கண்ணில் பட்டு விட்டால், கண் சிவந்து விடும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.. அமிலத்தைக் குடித்தவருக்கு கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. விழுங்கும் போது தொண்டை வலிக்கும். தொண்டையை அடைப்பது போலிருக்கும். நெஞ்சு எரியும். சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரலாம். வலிப்பு ஏற்படலாம்.

உடனடியாக, உடுத்தியுள்ள ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். தோலில் அமிலம் பட்டிருந்தால், அதிகமாகத் தண்ணீர் விட்டுத் தோலை நன்றாகக் கழுவ வேண்டும். இது முக்கியம். சோப்பு போட்டு தோலைக் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் எரிச்சல் அதிகமாகிவிடும்.

தோலில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு, அதைத் தோலில் சுற்றலாம். அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.

பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் ‘ஆண்டாசிட்’ மருந்து கைவசம் இருந்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.

வாயைத் தண்ணீரால் கொப்பளித்துக் கழுவலாம். மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த நபர் குடித்த பொருளையும் எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தால், சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

அமிலம் பட்ட கண்களில் சொட்டு மருந்தை ஊற்றக்கூடாது. வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

Originally posted 2016-06-07 14:43:32. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *