நிறக்குருடு: வண்ணங்கள் அற்ற வாழ்க்கை!

சாதாரணமாக பார்வையிலோ, பார்க்கிற காட்சிகளிலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. காட்சிகளின் நிறங்களில்தான் பிரச்னையே… அதைத்தான் ‘நிறக்குருடு’ என்கிறார்கள். நிறக்குருடு ஏன் வருகிறது? அதன்  அறிகுறிகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசுகிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீண் கிருஷ்ணா.

“நிறக்குருடு என்பது வழிவழியாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னை. மரபணுக் கோளாறுதான் இதற்கான பிரதான காரணம். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்தி இருக்காது. ஒட்டுமொத்த உலகத்தையும் அவர்களுக்குத் தெரியும் ஒரே நிறத்தில்தான் பார்ப்பார்கள். சின்ன வயதிலேயே கண்கள் ஆடுவது, பவர் அதிகமாவது, பார்வை தெளிவில்லாமல் இருப்பதெல்லாம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். விழித்திரை பிரச்னையின் ஓர் அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

‘கோன் டிஸ்ட்ராஃபி’ என சொல்லக்கூடிய பிரச்னையும் இதற்கான முக்கிய காரணம். நம் விழித்திரையில் ‘கோன்’ என சொல்லப்படுகிற அணுக்கள் இருக்கும். அந்த அணுக்கள்தான் படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறங்களை அடையாளம் காண்பதற்கும் பொறுப்பு. அந்த கோன்களில் பிரச்னை வரும்போது, நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம். இது பெரும்பாலும் உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களுக்கு அதிகம் வரும். இது தவிர, ருமட்டாயிடு ஆர்த்ரைடிஸ் என சொல்லக்கூடிய மூட்டுவலி பிரச்னைக்காகவும், டி.பி. என்கிற காச நோய்க்காகவும் சில மருந்து களை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்பவர்களையும் அபூர்வமாக இந்த நிறக்குருடு பிரச்னை பாதிப்பதுண்டு.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்ப்பதும் இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும்.பொதுவாக இந்தப் பிரச்னைக்கு வயது வித்தியாசம் கிடையாது. எந்த வயதிலும் பாதிக்கும். பிறந்த குழந்தைக்கு, 3 வயதுக்குப் பிறகு நிறங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியவில்லை என சந்தேகப்பட்டால், உடனே கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். சில பிரத்யேக சோதனைகளை செய்து கண் மருத்துவர் அதை உறுதிப்படுத்துவார். இந்த பாதிப்புக்கு சிகிச்சைகள் கிடையாது. பிரச்னையை சமாளித்து வாழப் பழகுவதுதான் தீர்வு. பாதிப்பு இருப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள், டிராஃபிக் போலீஸ், பைலட், மருத்துவம் மாதிரியான சில முக்கியமான வேலைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்…’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *