தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது. குழந்தைக்கு ஏதேனும் சளி, மூக்கடைப்பு இருந்தால் உடனே நாம் தேடுவதும் தைலத்தைதான். மூக்கிலும், தலையிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட, சிறிது நேரத்திலேயே சுவாசம் சீராகிவிடும். தைலத்தை யார் யார் பயன்படுத்தலாம், எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது போன்ற சந்தேகங்களை சேலம் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப.அருளிடம் கேட்டோம்.

‘மூட்டு வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தும்தைலம், வலி நிவாரணித் தைலம். இதில் எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்குத் தடவக் கூடாது. மிளகாய்ப் பழம் போல் மூக்கு சிவந்து, தைலம் தடவிய இடத்தில் எரிச்சலும் கொப்பளங்களும் ஏற்படலாம். தைலத்தைப் பயன்படுத்தும்போது ‘கான்டாக்ட் டெர்மெடிட்ஸ்’ (contact dermatitis) என்னும் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம். ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக தைலம் தடவும்போது தோலின் நிறமே கருத்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம்.”

”தைலங்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் என்ன?”

மீதைல் சாலிசிலேட் (Methyl salicylate), மென்தால் (Menthol), கற்பூரம் (Camphor) போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை, எதிர்ப்பு மருந்தாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வலியைக் குறைத்து நிவாரணம் தருகின்றன!

சாலிசிலேட், மென்தால், கற்பூரம் இவற்றுடன் மர எண்ணெய், லவங்கம், மிளகாய் (capsaicin), ஓமம் கலந்து செய்யப்படும் தைலம்… சளி, இருமல், மூக்கடைப்பு, தலைவலிக்கு நல்ல நிவாரணம் தரும். அமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தைலங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். வலி நிவாரணி தைலங்களிலேயே அதிக வீரியம்மிக்க ‘டைகுலோபினாக் அமிலம்’ உள்ள தைலங்கள் மூட்டுவலி, கால்வலி, தசைப்பிடிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், இந்தத் தைலத்தை மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவேண்டும். தலைவலிக்குப் பயன்படுத்தவே கூடாது.”

”எந்தத் தைலம் பெஸ்ட்?”

”தைலங்கள் வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. பொதுவாக நீலகிரி தைலம்தான் பெஸ்ட். பக்க விளைவே இருக்காது.””தைலம் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?”

”சித்த மருத்துவத்தில் கற்பூராதி வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த தைலம்தான். சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது. 500 கிராம் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் 5 நிமிடம் காய்ச்ச வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, இதனுடன் 50 கிராம் கற்பூராதி சேர்த்து, நன்கு கலக்கவேண்டும். 50 கிராம் சாம்பிராணி கட்டியைச் சேர்த்துக் கலக்கவேண்டும். இந்தத் தைலத்துக்கு ஆவியாகும் தன்மை அதிகம் இருப்பதால், இறுக்கமாக மூடி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி போன்ற அனைத்துக்கும் உடலின் மேல்பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.”

எச்சரிக்கை டிப்ஸ்

12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு முறை அலர்ஜி ஏற்பட்டால், அந்தத் தைலத்தை மறுமுறை உபயோகிக்கக் கூடாது!

கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புண், வெடிப்பு, தோல் நோய், அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் தைலத்தைச் சூடுபறக்கத் தேய்க்கவே கூடாது. லேசாகத் தடவினாலே போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *