ரத்தத்தைத் தூய்மை செய்யும் புளிச்சக்கீரை!

புளிச்சக்கீரை… புளிப்புச்சுவை நிறைந்தது என்பதால், இந்தக் கீரை புளிச்சக்கீரையானது. புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு. இது ஆந்திரா பகுதியில் ‘கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை.

இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த இந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக புளிச்சக்கீரையுடன் மிளகாய் சேர்த்து வேக வைத்து உப்பு சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிடுவார்கள்.

வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். இதேபோல், மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.

புளிச்சக்கீரையை காய வைத்து அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு (பச்சைப்பருப்பு), ஜாதிக்காய், சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்து பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான குழந்தையின்மை குறைபாடு விலகும். இந்தப் பொடியை காலை மற்றும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு சரியாகும். பெண்களும் இதை சாப்பிடுவதால் தாம்பத்திய உறவு பலப்படும்.

(பின்குறிப்பு: சில வகை நோய் மற்றும் குறைபாடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் உப்பு, புளி சேர்த்தால் பிரச்னை தீவிரமாகும் என்பதை மனதில் கொண்டு, புளிப்புச்சுவை நிறைந்த இந்தக் கீரையை புளி பத்தியம் இருப்பவர்கள் அந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *