சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை..

நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் முதல் இடம் கீரைக்குத்தான். தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளைத் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் சாப்பிடலாம். மீன், கோழி இறைச்சியை எண்ணெயில் பொரிக்காமல் நீராவியில் வேகவைத்தோ, குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

மருத்துவர் பரிந்துரைப்படி பாதாம் முதலான நட்ஸ் சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி ஆகியவற்றைச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள், கடலை வகைகள், முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, அன்றாடம் சராசரியாக 1,500 கி.கலோரி போதுமானது.

சிறுதானியம் சாப்பிடுங்கள்
அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியம் மிகவும் சிறந்தது. சிறுதானியத்தில் வெறும் மாவுச்சத்து மட்டும் இன்றி நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பிராதன உணவாக ஏதாவது ஒரு வேளையாவது தினமும் சாப்பிடுவது நல்லது.

தவிர்க்க வேண்டியவை…
எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும். கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், கோலா பானங்கள், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க்புஃட், அப்பளம், ஐஸ்க்ரீம், சாட் உணவுகள், மைதா சேர்க்கப்பட்ட பூரி, பரோட்டா, இனிப்பு வகைகள், மாவுச்சத்து, கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆர்கானிக்குக்கு மாறுங்கள்!
பூச்சிக்கொல்லிகளால் எண்ணற்ற பக்கவிளைவுகள், பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, முடிந்தவரை இயற்கை விவசாயத்தில் விளைந்த, ஆர்கானிக் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதாகக் கருதுபவர்கள் வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் சிறு தோட்டம் அமைத்து, காய்கறிகள் பயிரிட்டு அவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்திச் சாப்பிடலாம்.

அரிசி – கோதுமை:
வெள்ளை அரிசி அதிகம் பயன்படுத்துவது சர்க்கரை நோய்க்கு வித்திடும் என்பது உண்மையே. தற்போதைய பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் வெறும் மாவுச்சத்து மட்டுமே இருக்கிறது. அரிசி அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் அதிகமாகத் தேவைப்படும். எனவே, அரிசியை ஏதாவது ஓர் உணவு வேளையில் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கலவை சாதம், பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடுவதைக் குறைத்து, அரிசியுடன் காய்கறிக் கூட்டு, முட்டை, மீன் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு பெரிய அளவு அதிகரிக்காது. கோதுமையில் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. முழு கோதுமையை வாங்கி, மைதா சேர்க்காமல் அரைத்து, எண்ணெய் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பாக்கெட் கோதுமை மாவைத் தவிர்க்கவும். மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அசைவம்:
அசைவ உணவு விரும்பிகள் ரெட்மீட் எனச் சொல்லப்படும் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்காத கோழி இறைச்சியை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். மீன், உடலுக்கு மிகவும் நல்லது. கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியை சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *