நீரழிவு என்றால் என்ன?

உலகில் உள்ள மக்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமானவர்களை பாதிக்கும் ஒரு வியாதி என்றால் அது Sugar என்று சொல்லகூடிய நீரழிவு நோய். இந்நோயை சர்க்கரை நோய் மற்றும் மதுமேகம் என்றும் கூறுவார்கள்.

நீரழிவு நோய் நம் உடலில் உருவாக காரணம் என்னவெனில், நமது உடல், இரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன, இரத்த குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றக்கூடிய வேலையை இன்சுலின் என்னும் சுரப்பி செய்கிறது. இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும் பொழுது நமது உடலால் இரத்த குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது இந்த நிலையை நீரழிவு என்று கூறலாம்.

நீரழிவின் வகைகள்….

டைப் 1 நீரழிவு நோய் [Type 1 Sugar] இது நமது உடலில் இன்சுலின் சுரப்பி மொத்தமாக சுரக்காத நிலை, டைப் 2 நீரழிவு நோய் [Type 2 Sugar] இது இன்சுலின் கம்மியாக சுரக்கும் நிலை.
உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்பட்ட இரத்த குளுக்கோஸ் தவிர உடலில் தங்கும் குளுக்கோஸ் கழிவாக வெளி ஏறாமல் உடலில் தங்கினால் ஹை சுகர் [High Sugar] என்றும் தேவைக்கு குறைவாக இரத்த குளுக்கோஸ் கிடைத்தால் அது லோ சுகர் [Low Sugar] என்றும் அழைக்கப்படுகிறது.

இது நீரழிவு நோயை பற்றி நாம் எளிமையாக தெரிந்து கொள்ள கூடிய விஷயம்.
இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருப்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?

திடீரென்று மயக்கம் ஏற்பட்டால் அதுவும் உணவு உண்ணும் நேரம் சிறிது தாமதம் ஆகும்போது ஏற்படும் தலைசுற்றுடன் கூடிய மயக்கம்.

ஒரு நாளில் அதிகமாக சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில்.
வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுத்தல்.
களைப்பாக உணர்தல்.
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைதல்.
வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகும் போது.
நோயை உணர்ந்த பின் என்ன செய்ய வேண்டும்.
நீரிழிவைக் குணப்படுத்த முடியாது, ஆனால் அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும் அன்று பார்போம்.
உங்கள் உணவில் நீங்கள் மாற்றங்களைச் செய்வதுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்யுங்கள், அதாவது நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாக்கிங் இவற்றில் உங்களுக்கு முடிந்த பயிற்சியை செய்யவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை ஒரே சமயத்தில் சாப்பிடாமல் 2 மணி நேரம் இடைவெளி விட்டு பிரித்து உண்ணவேண்டும்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கறிகள், பழம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, பருப்பு மற்றும் பயிறு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
வாழைத்தண்டு அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறு குறிஞ்சாங் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும் இதனை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு மோர் அருந்த நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் தீரும்.
அசைவ பிரியர்கள் மீனை தாராளமாக உண்ணலாம் [எண்ணெயில் பொறித்த மீனை தவிர்க்கவும்] கொழுப்பு நீக்கிய இறைச்சியைக் குறைவாக சாப்பிடவும் (தவிர்ப்பது நல்லது).
தாவர மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகியுங்கள், ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
பிஸ்கெட்டு, சாக்லேட், எண்ணெயில் பொறித்த மொறுமொறுப்பான பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சிற்றுண்டிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பால் உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கிய அல்லது பாதியளவு கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
செயற்கைப் பானங்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையும் தவிர்க்கவும்.
வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதிர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஓரே இடத்தில் அமர வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும் [முடியாத பட்சத்தில் இறங்கும்போது தவிர்க்கவும்].
சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் இவர்களை எளிதில் பிற நோய் தாக்கும், எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
உங்களுக்கு புகை, மது மற்றும் போதை பழக்கம் இருந்தால் நிறுத்திவிடுங்கள்.
நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை மருந்துகள்…
மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாவல்பழக் கொட்டை :
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
மாந்தளிர் பொடி :
மாமரத்தின் தளிர் இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு. அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் அருந்தி வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வேப்பம்பூ பொடி :
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
இசங்கு வேர் :
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை :
நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் நல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தயம் மற்றும் நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கலாம்.
அவரைக்காய் :
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
பாதாம் பருப்பு :
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகும்.
ஆவாரம்பூ :
ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம் அல்லது காலையில் 5 ஆவாரம்பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது ஆவாரம்பூவை காயவைத்து பொடி பண்ணி சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.
கொய்யா இலை டீ:
தினம் டீ குடிப்பதற்கு பதில் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து டீ போல் அருந்தலாம் [பால் சேர்க்க கூடாது டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூள் சேர்த்து கொள்ளலாம்].
கோவைக் காய் மற்றும் பழம் :
கோவைக் காயை பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும், கோவைப் பழமும் நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.
கொய்யா பழம் :
இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.
பாகற்காய் பொடி:
பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒரு சில பொடிகள் சர்க்கரை நோய் குணப்படுத்தும் சக்தி உடையது, இவற்றை சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அவை
சிறியாநங்கை பொடி
கருஞ்சீரகப்பொடி
வெந்தய பொடி
மருந்தே வேண்டாம்….
உணவு கட்டுப்பாடு மிக அவசியம் அதாவது கண் பார்த்த உணவை எல்லாம் உண்ண ஆசை படக் கூடாது மேலும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
வெண் சர்க்கரையை (சீனியை) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
இந்த கட்டுரை மூலம் நீரழிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி, நீரழிவு நோய் பற்றிய பயம் மற்றும் நீரழிவு இல்லாத வாழ்க்கையை இதை படித்தவர்கள் பெற வேண்டும் என்பது எனது நோக்கம்.
எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முக்கியமான முதலுதவி சிகிச்சை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *