உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

குட் நைட்!

நள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலருக்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்தும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்… திடீர்னு ஏன் இப்படி? சளி பிடிக்கப் போகுது போல…” என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேர இம்சையிலிருந்து தப்பித்து விடுவார்கள். அந்த திடீர் இருமல், தும்மலுக்கான காரணம் மட்டும் தெரியாது!

கண்ணுக்கு தெரியாமல் தலையணை, மெத்தைகளில் வாழும் டஸ்ட் மைட் (Dust mites) பூச்சிகள்தான் இதற்குக் காரணம்” என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஜரீன் முகமத். நமது படுக்கையில் வாழும் இந்தப் பூச்சிகள் செய்யும் தீங்குகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.

டஸ்ட் மைட் பூச்சிகள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். இவை பல நாட்களாக சுத்தம் செய்யாத மெத்தைகள், தலையணைகள், போர்வைகளில் உயிர் வாழும். மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர் வாழும். துணிகளில் உள்ள செயற்கை இழைகளையும் உண்ணும். இந்த டஸ்ட் மைட் பூச்சிகள் செய்யும் அலர்ஜியானது ஒரு சீசனுக்கு மட்டும் வருவதல்ல… ஒரு முறை தலையணை, மெத்தைகளில் வந்துவிட்டால் வருடம் முழுவதும் இருக்கும்.

டஸ்ட் மைட் அலர்ஜியை உடனடியாககண்டுபிடிக்கவும் முடியாது. படுத்து அயர்ந்து தூங்கிய பின்னர் சில மணி நேரம் கழித்தே டஸ்ட் மைட் உருவாக்கும் துகள்கள் மூக்கினுள் சென்று தனது வேலையை ஆரம்பிக்கும். தும்மல் அல்லது இருமல் தொடரத் தொடங்கும். நடு இரவில் அல்லது விடியற்காலையில் மட்டுமே முழுமையாக டஸ்ட் மைட் அலர்ஜி தனது வேலையைக் காட்டும். நெடுநாளாக சுத்தப்படுத்தப்படாத குஷன் சோபாக்களில் கூட டஸ்ட் மைட் வாழும்.

சிறிய அளவு சுவாசத்தில் கலந்தால் கூட கூருணர்ச்சியை தூண்டி பிரச்னையை உருவாக்கும். கதகதப்பான வெப்பநிலையில் அல்லது ஈரப்பதமுள்ள சூழலில் மட்டுமே டஸ்ட் மைட் பூச்சிகளால் வாழ முடியும். இவை வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.

சிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கு இவ்வகை அலர்ஜி இருக்கும். அவர்களின் பரம்பரையில் யாருக்காவது இவ்வகை அலர்ஜி இருந்தால் சிறிய அளவு டஸ்ட் மைட் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உருவாக்கிவிடும். வீட்டையும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, இந்த அலர்ஜி வருவதற்கான வாய்ப்பு அதிகம். டஸ்ட் மைட் மட்டும் அலர்ஜியைஉருவாக்குவதில்லை. அது உருவாக்கும் ஒரு வகை வீண் புரதமும் அலர்ஜியை உருவாக்கும். ஒரு டஸ்ட் மைட் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீண் புரதங்களை வெளியிடுகிறது. டஸ்ட் மைட் அழிந்தாலும், அது உருவாக்கும் வீண் புரதங்கள் அழியாமல் தும்மல், இருமலை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

டஸ்ட் மைட் அலர்ஜி உள்ளவர்களுக்கு அவர்களது ஒவ்வாமை அளவை பார்த்து அலர்ஜி மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்போம். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டால் டஸ்ட் மைட் அலர்ஜியை கட்டுப்படுத்தி விடலாம். இந்த மருந்துகளை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளலாம். ஊசி வடிவில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது…” என்கிறார் டாக்டர் ஜரீன் முகமத்.

கட்டுப்படுத்தும் முறைகள்

அலர்ஜியை கட்டுப்படுத்தும் உறைகள் தலையணை, மெத்தை, சோபாவுக்கு கிடைக்கிறது. இவ்வகை உறைகளை பயன்படுத்தினால் டஸ்ட் மைட் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

படுக்கையில் விரிக்கும் துணிகளையும், தலையணை, மெத்தை உறைகளையும், திரைச்சீலைகளையும் வாரம் ஒருமுறையாவது சுடுதண்ணீர் கொண்டு சுத்தமாக துவைக்க வேண்டும்.

துணியை உலர்த்தும் கருவியான டிரையர் கொண்டு (130 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்ப நிலை) மெத்தையை தேவைப்படும் போது உலர்த்தினால் டஸ்ட் மைட் பூச்சிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சுத்தம் செய்யும் போது, மூக்கில் எந்த துகள்களும் போகாதபடி, முகமூடியை அணிந்து கொள்வது அவசியம்.

அதிக குளிரான இடங்களில் மெத்தைகளை, உறைகளை வைத்தாலும் டஸ்ட் மைட்கள் அழிந்துவிடும். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூசிகள் எளிதாக உள்ளே போகாதவாறு உள்ள துணிகளை பயன்படுத்தலாம். அதை தகுந்த கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதும் முக்கியம்.

சுத்தமாக கழுவி வைக்கக்கூடிய பொம்மைகளை மட்டுமே வீட்டில் பயன்படுத்த வேண்டும். புத்தக அலமாரிகள், நகைப்பெட்டிகள், செய்தித்தாள்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

மெத்தையை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில் நல்ல வெயிலில் உலர விட்டால் டஸ்ட் மைட் பூச்சிகள் ஓரளவு அழிந்துவிடும்.

Originally posted 2016-03-26 17:24:38. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *