உங்கள் நாப்கின் பாதுகாப்பானதா?

ஒரு பெண் பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் எனும் மாதவிலக்கு நிற்கும் வரை சுமார் 17,000 நாப்கின் பேட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு சர்வே. ‘சானிட்டரி நாப்கின்களிலும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன.

பெரும்பாலும்  வெள்ளை நிறத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களையே வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சானிட்டரி நாப்கின் வந்த ஆரம்ப காலத்தில், நாப்கின் தயாரிக்கப் பயன்படும் காட்டன், க்ரீம் நிறத்தில்தான் இருக்கும்.

அதை வெண்மையாக்க ‘டயாக்சின்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. டயாக்சின் மிகக்குறைந்த அளவே சேர்க்கப்பட்டாலும் அது ஆபத்தானதுதான். இந்த ரசாயனம் உடலில் ஒட்டிக்கொள்ளக்கூடியது. உடலினுள் நுழையும் இந்த ரசாயனம், ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும்.

இடுப்புப் பகுதியில் வீக்கம், சினைப்பைப் புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனமாக்குவது, குழந்தையின்மைக்கான வாய்ப்பை அதிகரிப்பது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். நாப்கின்கள் தயாரிக்கும் போது, செயற்கை நறுமணப் பொருட்களையும் வாசனை பொருட்களையும் சேர்க்கிறார்கள்.

இவை மாதவிலக்கின்போது ரத்தத்தில் கலந்து பிறப்புறுப்புப் பகுதியில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். நாப்கினை அதிக நேரத்துக்கு மாற்றாமல்  இருக்கும்போது அதில் பாக்டீரியா உருவாகி வயிற்றுப்போக்கு, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதைத் தவிர்க்க, குளோரின் ஃப்ரீ பேட்களை பயன்படுத்தலாம். இதில் டயாக்சின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். மேலும், நாப்கின்களின் கவர் மீது ‘அன் பிளீச்டு ஒன்’ என்ற முத்திரை இல்லாத நாப்கின்கள் அனைத்தும் டயாக்சின் பிளீச்சிங் செய்யப்பட்டு வந்தவையே.

எனவே, நாப்கின் வாங்கும்போது இந்த முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். நாப்கின்னின் மேல்பகுதி சருமத்தில் படக்கூடியது என்பதால், அது பருத்தியால் ஆனதாக இருப்பது மிகமிக அவசியம்.

சானிட்டரி நாப்கின்களுக்கு வாலன்டரி தரக் கட்டுப்பாடு சான்றிதழ் ஐ.எஸ்.ஐ. 5405 பெற்றிருக்க வேண்டியது அவசியம். டயாக்சின் இல்லாத நாப்கின்கள் இப்போது அதிகம் வரத்தொடங்கியுள்ளன. இந்த வகை நாப்கின்கள் மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்.

பாலிகுளோரினேட்டடு டைபென்சோடையாக்சின் (Polychlorinated dibenzodioxins), பாலிகுளோரினேட்டடு டைபென்சோ ஃபியூரான் (Polychlorinated dibenzofurans) போன்றவை சுற்றுப்புறச் சூழ்நிலைக்குக் கேடு செய்யக் கூடியவை என்பதால், தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இதுபற்றிய விழிப்பு உணர்வு பெண்கள் மத்தியில் மிகக் குறைவே. நாப்கினைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதேபோல அதை அப்புறப்படுத்துவதிலும் கவனம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *